Showing posts with label மரபுக் கவிதைகள். Show all posts
Showing posts with label மரபுக் கவிதைகள். Show all posts

Thursday, 8 October 2015

கற்கண்டின் சுவை


























இமை பேசும் மொழிக்கெந்தன்
இள நெஞ்சம் பரிசாகும்
இதழ் சிந்தும் தேனமுதென்
இதழ் தேடும் வரமாகும்.

சுவையெல்லாம் கூடியிரு
கருவிழியென் களமாகும்.
சுந்தரியுன் கரம் பிடிக்க
சொர்கமேயென் வசமாகும்.

செவிமடலின் மேலசையும்
சிறுகூந்தல் இசையாகும்
செங்கனியின் செழுமையிரு
கன்னத்தின் வளமாகும்.

கவிபேசும் காதலரின்
கனவெனது வரவாகும்.
கண்மணியே நம்வாழ்வு
கற்கண்டின் சுவையாகும்!

Monday, 21 September 2015

தஞ்சமடி
























கருத்த இமை விசிறி
விழியோ வெண்மைத்திரி
கருணை மழை பொழியும்
கருமணியோ காந்தமடி

ஓரப்பார்வை வழி
உள்ளம் நுழைந்தபடி
மனதிருளை துடைத்தெறியும்
நீயே எந்தனொளி

சிறுத்த நாசியடி
சிவந்த அதரமடி
இதயச் சிறையமர
வேறென்ன வேண்டுமடி

கன்னக் கதுப்புக் கனி
கவிதை யுந்தன் மொழி
காதல் கொண்டுவுனில்

நானே தஞ்சமடி..!

Saturday, 19 September 2015

கவனம் பூக்கிறேன்


கருநிழல் படர்ந்த மணற்பரப்பில்
எனை பதியஞ்செய்கிறேன்
கனிச் சுவையிழந்த மாவிடத்தில்
எனை கொய்யச் சொல்கிறேன்

நெடுஞ்சாலையதன் இருமருங்கில்
அனல் கரையக் கேட்கிறேன்
நிதம் கனத்தவிழி அடர்ந்த இமை
தனில் உன்னை பார்க்கிறேன்

முடிவான ஒரு சொல்லெடுத்து
அதில் முகிலை கோர்க்கிறேன்
மழை கண்ட கனப்பொழுதுகளில்
மனம் விண்டு போகிறேன்

பெருமூச்சின் கனல் பூத்திருக்க
பகலென்றே காய்கிறேன்
படரிரவின் வளர் கருமையினில்
பனிச் சூழ வேர்க்கிறேன்

இதுகாறும் நின் குரலிசையில்
என் கவனம் பூக்கிறேன்
இனி திசையறியா நெடும் பயணங்களில்
எனை கொண்டே போகிறேன்

Friday, 18 September 2015

பாய்ச்சிடடி


கண்ணிமைகள் என் நினைவில் திளைக்க மகிழ்
காதலிசை விழிவழியே ஒழுகுதடி!
தென்னமுதில் திளைத்திட்ட தேன்பாகாய்
தெவிட்டாத இசையுந்தன் மொழிகளடி!

மின்னுமிரு கண்ணொளியில் சிறை கண்டு
மீண்ட எனை கவி மொழியால் தழுவிடடி!
இன்னுமொரு நுதல் கண்ட திலகமதில்
என்னுயிரை கண்டுமனம் மகிழுதடி!

பொன்னுதிர்த்த கன்னமதில் என்மனதை
பொருத்தி வைத்து பார்ப்பதுயென் ஆசையடி!
விண்மறைத்த நிலவொளியை கண்பொதித்து
விரும்புகிறேன் என என்னுள் பாய்ச்சிடடி!

Sunday, 21 June 2015

மந்தகாச பார்வை

மந்தகாச பார்வை கொண்ட மனோரஞ்சிதம்
மைய லவள் கூந்தல் மின்னும் மலர் கோபுரம்
அந்திவானம் போலிரெண்டு அதர கோவையும்
அமிழ்து கொண்டு பருக தூண்டும் வேளை மந்திரம்.
நங்கை நாசி நறுமண முல் லைப்பூவின் மணம் கொண்டிட
நாயகனும் இறுகணைத்து சுவாசம் பெற்றிட
மங்கல நாண் பூண்ட மங்கை மார்பில் சாய்ந்திட
மன்னவன் தன் விண்ணுலகம் கண்ணில் காணுவான்

Saturday, 20 June 2015

காதல் கொள்ளும்

மின்மினிப் பூச்சியென மிதந்து வந்தனளென்
மென்மன முழுமையுமாய் பரவி நிறைந்தனள்
பன்மொழிப் பாவலரும் எழுதாக் காவியமா மிப்
புவன மெங்கிலுமே வரையா ஓவியமே

அன்ன நடை தளர ஆடும் மலரமுதம்
அலங்கு மதன் மேலே இலங்கும் விழி சுழலும்
பின்னல் முன்வருங்கால் மேடை கண்டதென
பாதம் பாவு மொரு நடனப் பேரழகும்

செந்நிறக் கோவையிதழ் சிந்தும் புன்னகையும்
செங்கண் வரி மலர பொங்கும் ஒளிமழையும்
கன்னக் கதுப்பினிலே திளங்கும் கனியழகும்
காதல் கொள்ளுமெனை கொல்லும் அனுதினமும்

Saturday, 8 November 2014

சிறகுதிர்ந்தமனம்


உயிர்க்குடிக்குமுந்தன் விழிக்கதிர்வீச்சில்
உருக்குலைந்தவுளம் உனைக்கொண்டதடி
கயற்விழியாளின் காதல் தேடலில்
கரையுடைந்தமனம் புலம்பெயர்ந்ததடி!

மயில்தோகையென இமைமூடுகளி
மதயானையென எனைக்கொல்லுதடி,
செயல்போதையுற சுவைத்தேனெனவே

சிறகுதிர்ந்தமனம் உனில் சரிந்ததடி !!

Monday, 22 September 2014

காதலின் எல்லை


கருமேக மெடுத்து கூந்தலென இழைத்து
இருவிழியில் மின்னல் ஒளி சிந்த அணைத்து
வழிகின்ற கண்ணிற் கணை யொன்றை முடித்து
தெளியாத வானாய் தன் பார்வை கொண்டாய்.

பிரிவில்லை காதல் உணர்வுக்கு என்றும்
விடைபெற்ற காதல் நெஞ்சத்தில் தஞ்சம்
மொழியற்றுப் போன நிமிடங்கள் சொல்லும்
கொடிமுல்லை யுந்தன் அன்பிற்கென் நெஞ்சம்

உயிர் தொட்ட காதல் உருவான தென்று
உனில் வாழுமெந்தன் உயிர் கண்ட பின்பு
உளத் தேடல் செல்லு வழியெங்கு முந்தன்
நிழல் பூத்து நிற்க நிஜமென்று கண்டேன்!

புரிகின்ற வாழ்வில் தவமொன் றுமில்லை,
புரியாத பேர்க்கு வாழ் வொன்றுமில்லை,
விரிகின்ற வானின் எல்லைக்கு ளில்லை
வழிந்தோட கண்டேன் காதலின் எல்லை!

உதவுமே



















நினைவுகளின் ததும்பல்களில்
நீளுமென் இரவுகள்
கனவுகளின் காத்திருப்பில்
புலருமென் விடியல்கள்

தொலைந்திடவும் தொடர்ந்திடவும்
தொடர்பில்லா நிகழ்வுகள்
பருவ நிலை கடந்த பின்னும்
பயிரிடாத உணர்வுகள்

ஏக்க சுழல் எனை வருத்த
இயல்பிழந்த சிறகுகள்
புனைமுகத்தின் வெளிக்கொணரா
சுயமிழந்த சிதறல்கள்

நீண்டதொரு அரவணைப்பின்
நிழல் சுமந்த சுவடுகள்
நித்தமெந்தன் வாழ்விலே
நீர் சுமந்த கோடுகள்

நீயெனக்கு வாழ்க்கையின்
இறந்தகாலமெங்கிலும்
உனை சுமந்த நெஞ்சுடன்
உயிர் சுமக்க உதவுமே!

Friday, 19 September 2014

மலர்வாயா?

























பூஞ்சிறகாய் நீயென்னுள்
புதுக்கவிதை படிக்கின்றாய்
தேன்மெழுகாய் நானுன்னால்
மனமுருகி வாழ்கின்றேன்

கனல்காற்றாய் நீயென்னை
தகித்தபடி போகின்றாய்
கார்முகிலாய் நானுன்னை
நினைந்தபடி சுழல்கின்றேன்

சுடுதீயாய் நீயென்னை
சுட்டெரிக்கப் பார்க்கின்றாய்
செந்தமிழால் நானுன்னை
சேர்த்தணைத்து வியக்கின்றேன்

விடுகதையாய் நீயெந்தன்
விடைமறைத்து மீள்கின்றாய்
வேதனையின் சுமை நீங்க
உனை நாடி நிற்கின்றேன்

சில நேர பிழை பொறுத்து
சிந்தனையில் குளிரிருத்தி
எனை மீட்க வருவாயா?
இதழ் பூத்து மலர்வாயா?

Thursday, 11 September 2014

வளைக்கரம் பற்றுவேன்


வானுறை மதி யென் கையறு நிலைகண் டெழுதியதோர் கவி
வாசலிலே யவள் காலடியோசை தேடியே ஏங்குதென் மதி
நானொரு பாதி நீயொரு பாதி சொன்னவள் போனதோ விதி
நாதமு மிழந்து கீதமும் தொலைந்து நான் நடப்பது யார் சதி

செவிப்பறை அதிரும் இரைச்சலென் மனதில் எழும்புவதேனோ ரதி
செந்தமிழ் மாலை சூடிட வேண்டி எழுதிய வரிகள் பா ரடி
தவிப்பினில் என்னுள் தன்னிலை இழந்த சூழலும் தோன்று தடி
தேவியே யுந்தன் மடியினில் துயின்ற நாட்களை தேடும் பதி

ஆலிலை கண்ணன் பவளச் செவ்வாயுடன் நம்மிலே உதிப்பா னடி
ஆனந்த கீதம் பாடிடும் காலம் விரைவினில் வருகு மடி
பேரலை சூழ்ந்த தீவினைப் போல் நம் வாழ்வின் நிமிட மடி
பேரிடர் களைந்துன் வளைக் கரம் பற்றுவேன் கவி நயம் கூடிய ப்ரிய சகி!

Tuesday, 19 August 2014

அசரீரியாக


இருள் சேர் கொடு வனந்தனில் புகை சூழ் கருமரமிடை 
மருள் நீங் குற நடை பயின்றே. மனம் துணிந்தே புது யுகம் தேடிட 
அருள் தானென ஒளிப்பிழம்பென ஆங்கோர் திகழ் வந்தே மெல 
விருப்போ அதில் வெறுப்போ இலை வியப்பே எனைத் தொடரல் கொள 

மதியிடை வந்து கெஞ்சும் சுடும் பிறழ்களில் இளநெஞ்சே என
விடுபடு வென யெந்தன் மன யிசை அசைவுகளதில் முந்தி யெழ
தடை சிதறிட என்னுள் பல மணம் பரப்பிடும் எண்ணம் எழ
வெண்பனியுறை மேகம் கார் முகில் மறைந்திட வான் பரவிட
எந்தனுயர் நிலையிதுவேயென்றொரு அசரீரியாக..!

Wednesday, 30 July 2014

இனிப்பேனே


முத்தாரம் கேட்ட இளமன்னன் மார்பில்
வித்தாரக் கள்ளி விளையாடுகின்றாய்
கொத்தோடு பூவை விரல்கொண்டு கிள்ளி
அத்தானென் மேலே கணை பாய்ச்சுகின்றாய்

செம்பூவே யுந்தன் இதழ்பூத்த நகையில்
விண்மீதிலாடும் பொன்னூஞ்சல் கண்டேன்
கண்பார்த்த மண்ணின் துகள் மீதிலெல்லாம்
கவித் தேனின் ஊற்று துளிர்த்தாடக் கண்டேன்

நீர் கொண்ட நிலவை வான்மேவிக் காணாம்
நிலமீது பூத்த மலர்மீதும் காணாம்
கார்கொண்ட மேகம் மழை நீரே யாகாம்
கனியேயுன் மீது துளிர்த்த நீரென் உணவாம்

பனித்ததோ உன்மீது துளிர்த்ததோ பெண்ணே நீ
குளித்ததோ பன்னீரைத் தெளித்ததோ அறியேனே
எனக்கது சுவைத்தேனே இனியதைச் சுவைப்பேனே
எந்நாளும் என் வாழ்விலுனைக் கொண்டு இனிப்பேனே

Friday, 18 July 2014

தன்னையே ஈன்றனள்

மன்னவன் மார்பினில் பூத்தனள்
மார்கழி வெண்பனி போன்றவள்
தென்னவன் கைவிரல் தீண்டையில்
தென்றலின் ஸ்பரிசமாய் சிலிர்ப்பவள்

கண்களில் அபிநயம் கொண்டவள்
காதலில் சுகலய மானவள்
என்னுயிர் அவளென சொன்னதும்
தன்னுயிர் கொண்டெனை காத்தனள்.

பெண்மையின் உயர்திணை யானவள்
பெருமை சீர் தமிழினை யாள்பவள்
மென்மையும் திண்மையும் அவளுரு
மேவிட தன்னையே ஈன்றனள்

Monday, 30 December 2013

வந்திணைவாள்



நுதலில் விழுந்த ஓரிழையை விலக்கி
நெளியுமிரு புருவமதை உயர்த்தி,
இதழ் வழிய புன்னகையை புகுத்தி
இயம்பினள் தன் கருவிழியை நகர்த்தி!

வண்டுகளை ஒளி மழையில் பொருத்தி
வெள்ளமென காதலிசை நிகழ்த்தி
பண்டு நிகழ் காமனுரை பரத்தி
வந்திணைவாள் என்னுயிரை மலர்த்தி!

Sunday, 22 December 2013

அன்னச்சிறகே

வெண்ணிற நீரோடையில்
கருமுத்து உருண்டோட
கனியே உன் இதழங்கு
எனை மூழ்கச் செய்யுதடி.

அரும்பாத முல்லைப்பூ
அவிழ்ந்தாட மகிழ்ந்தாடி
கரும்பான நாசியிதழ்
கவிசொல்லி விரியுதடி.

வாள்கொண்டு விளையாட
விழி மேலே புருவங்கள்
நீள் நெற்றி பளிங்காக
நிலைத்தன்மை கொண்டதடி.

கன்னத்தின் செழுமையிலென்
கனவெல்லாம் மின்னுதலில்
அன்னச்சிறகே யென் 
அனல் போக்க வருவாயா?

Friday, 13 December 2013

தந்திடு தளிர்கரம்





வெண்மலரில் கற்கண்டை பதித்தபடி விழியிருக்க,
மென்னிதழில் முத்துமலர் கோர்த்தபடி நகையிருக்க,
கன்னமது கவி நிலவின் வண்ணமதில் குழைந்திருக்க,
என்னவளின் எண்ணத்தில் நான் மட்டும் பூத்திருக்க,

சிந்தனையின் படிமத்தில் செதுக்கிய நல் சிறு நகையே,
நந்தவனப் பொன்னிதழில் தன்னுடலைக் கொண்டவளே,
பெண்மையிலே மென்மையுடன் திண்மையையும் தைத்தவளே,
தந்திடு உன் தளிர் கரமென் தனிமையினைத் தவிர்த்திடவே!