Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, 22 October 2015

முகமூடி



பிய்த்தெறியப்பட்ட முகமூடியில்
படிந்திருந்த பாசச் சுவடுகள்
கரைந்தொழுக
மீண்டுமோர்
முகத்திரையிட்டு
மிடுக்காய் வந்தவனின்
இறுதி நாட்களிலேனும்
உணர்த்தப் படலாம்
களைந்த முகமூடியும்
கசந்த கரைசல்களும்
அவனது பாகமென…

Sunday, 11 October 2015

யாசகம் கேட்டாள்(ர்)


இடுப்பில் இழுத்து செருகிய சேலை,
மிகுந்த ஆகிருதி,
மிடுக்கான நடையுடன்
பெண்மையின் கலப்படம்,
தலை வாரி
பின்னலிட்டு,

வளயத்தின்மேல் கொண்டையிட்டு,
பூச்சூடி, பொட்டு வைத்து,
பெண்மையை முன்னிருத்தி,
அடுத்திருந்த வாகனத்தின் ஓட்டுநரை,
அதட்டி(?) யாசகம் கேட்டாள்(ர்)

திருநங்கை குறித்து
படித்தவை மனதில் மின்ன,
அவரையே பார்த்திருந்தேன்
சட்டென திரும்பி
எனைக் கண்டு வேகமாய்
என்னிடம் வந்து,
தலை சாய்த்து,
உதடு சுழித்து
பெண்மை கலந்த
சிரிப்புதிர்த்து,
கை நீட்டினாள்(ர்).

பணமெடுக்க போனவனின் ஓட்டுநர்
 “என்ன சார்,
அதெல்லாம் வேணாம்,
கொடுக்கப் போனா
உங்க கைய பிடிச்சுக்கும்என
வேகமாய் வாகனத்தை
நகர்த்தி விட்டார்.

அந்நங்கை முகத்தில்
கோபம் துள்ள,
ஏக வசனத்தில்
என்னன்னமோ அள்ளி வீச,
என் முகத்தில்
எவ்வித மாற்றமுமின்றி

கண்ணாடியிறக்கி
கையசைக்க
ஓடி வந்து
நோட்டை பற்றிக் கொண்டு
என் கரத்திலொரு முத்தம்
பதித்துப் போனார்.

வெற்றிலை குதப்பிய
முத்தத்தின் வாசனை
இன்னும் என் கைதனில்...!

Friday, 2 October 2015

பிறந்த நாள்

















என்னவளின் பிறந்த நாள்.
என்ன வேண்டுமென
ஆவலாய் கேட்டேன்.
மனதிற்குள்
என்னைத்தவிர
என்ன கேட்பாளென
குறுகுறுத்தது.

அருகில் வந்து
மாலைத் தேநீரை தந்து
மந்தகாசப் புன்னகையை கொண்டாள்.

எனக்கென்ன தேவை?
எல்லாமே தந்து விட்டாய்,
உந்தன் புன்னகைக்கு
தவமிருப்பதைத் தவிர
வேறு பொன்னகையில்
விருப்பமில்லை என்றவளை

ஆசையாய் அரவணைத்து
அன்புடன் முத்தமீந்து,
அழைத்துப் போனேன்
அருகிருந்த ஆசிரமத்திற்கு.

எத்தனை வண்ணமின்னும்,
இதழ்களில் புன்னைகை சூடி
அங்குமிங்கும் ஓடியாடும்
தன்னிலை மறந்த
இளம் பூஞ்சிட்டுகள்

இந்த நாள் முழுதும் நாம்
இங்கிருந்து மகிழலாம்
உன்னை நான் அறிவேனன்பே!

ஒரு தினம் இங்கு வாழ்ந்தால்
உன்மனம் உருகும் நேசம்.
எனக்குமே மகிழ்ச்சி கூடும்
நாமிங்கு நாள் முழுதும்
சேவைகள் செய்வோமடி.

ஒரு தின சேவையிங்கு
ஒரு போதும் போதாதெனினும்
இது ஒரு தொடக்கமென்று
இருவரும் கொள்வோமே..

Monday, 28 September 2015

நமதென்று இருப்போம்















நானென்னை அறிய விழைகிறேன்
அதற்காக என்னை கடக்கவும் முயல்கிறேன்

பிரபஞ்சப் பெருவெளியில்
துகளினும் துகளாய்
அளவிடவியலா அணுவாய் நானிருக்க

நான் நானில்லையெனும் நிலை
நானறியும்வரை
நானெனை உணரவியலுமா

ஐம்புலன்களின் வழியை மட்டும்
இறுகப் பற்றிக்கொண்டு
அதனுள் கண்டவற்றிற்கு
அர்த்தம் கண்டுகொண்டு

எல்லைதாண்டிய பெருஞ்சக்தியை
என்னுள்ளும் புறமும்
அறியும் வழியறியாமல்

நானறிந்தவற்றை மட்டும் உலகமென்றும்
எனை காப்பவரை மட்டும்
இறைவனெனக் கருதிக்கொண்டு

அளப்பறிய பெருஞ்சக்தியை
அறியாமலே இருக்கின்றேனே

நானெவ்விதமோ
அங்ஙனமே நீயுமிருக்க

எதற்கிந்த அழுக்காறு
ஏனிந்த கடுங்கோபம்

இருக்கும் சிலகாலமும்
எனதென்றும் உனதென்றும் இல்லாமல்
நமதென்று இருப்போமே

உனையறிய நீயும்
எனையுணர நானும்
முயற்சிப்போமே...!

உணவை வீணாக்காதீர்



















மஞ்சள் காவியடித்து
மஞ்சம் புல்லால் கூரை வேயப்பட்டிருந்த
அவ்வகன்ற கிராமத்து வீட்டின்
கொல்லைப் புறத்தில்
வளைந்த மண் குலுமைகளிரெண்டில்
நிறைக்கப்பட்ட நெல்மணிகள் போக

காது வைத்த பெரிய அண்டாக்கள் நான்கிலும்
புகை மூட்டத்திற்கிடையில்
மாய்ந்து மாய்ந்து அவிந்து கொண்டிருக்க
விறகடுப்பின் வெக்கையில்
வெந்து கொண்டிருந்தனர்
நெல்லோடு அம்மாச்சியும் அம்மாவும்

பள்ளியிறுதி விடுமுறைக்கு போயிருந்த என்னை
முற்றத்துத் தரையில் கோரைப்பாயில்
மாமன்மகன் மோகனுடன்
தூங்கச் செய்திருந்தனர்

அவிந்த நெல்லின் வாசம்
நாசியைத் துளைக்க
நெடி தாளாது
உறக்கம் கலைந்து
மேல் கிடந்தவனின் காலை விலக்கி
பின்புறம் ஓடிப் பார்க்க

சூழ்ந்திருந்த புகைமண்டலத்தின் நடுவே
இருவரும் இருப்பதைக் கண்டு
தூக்கக் கலக்கத்திலிருந்த நான்
திகைத்த நொடி
போய்த் தூங்குடாக் குட்டி
என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு
மீண்டும் பாயில் உருண்டேன்

காலம் பல கடந்தாயிற்று
நாகரீகம் மாற்றிப் போட்டதில்
நகரத்தில் இன்று....

அடிக்கடி நினைவுகளில்
கிராமப் பெண்களின் கஷ்டநஷ்டங்கள்
கைகளில் சோறெடுக்கும் போதெல்லாம்
ஒவ்வொரு பருக்கைச் சோறும்
உணவை வீணாக்காதீர்களென
சொல்லிக் கொண்டே தான் இருக்கிறதின்றும்....

விரைவுப் பாதை



மார்தட்டிக்கொண்ட மயானத்தின் எல்லையில்
இழைந்திருந்த இருட்டுக்குள்
நடைபயின்ற ஊதல்காற்றும்

சற்று நேர அளவலாவலும்
பின்னர் பெருங்கூச்சலும்
இடையிடையே கூன் நிமிர்த்தும் அமைதியும் கலந்து

என்றோ தொடங்கி இன்று மாலை வரை
எரிந்த சடலங்களில் குடியிருந்த ஆத்துமாக்கள்
தான் மனிதனாய் பிறந்து
மிருகமாய் பிறழ்ந்த
பரிதாபக் கதைகளை கலந்துரையாடி

கூத்தாடும் கிளர்ச்சி மிகு வேளையின்
சுவாசமற்ற பிரேத நொடிகளையும்
அதனுள் மிதக்கும் அனர்த்த கணங்களையும்
அழுத்தம் மிகு சோக ரணங்களையும் அறியாது

பல மனித மிருகங்கள்
இளஞ்சிறாருக்கு
இன்னது கற்பிக்கலாமெனும் வரைமுறையின்றி

போதை வஸ்துக்களை கொடுத்தும்
பாலியல் கொடுமைகளால் சிதைத்தும்
தமக்கொரு விரைவுப் பாதையை
சிருஷ்டித்துக் கொண்டிருந்தன

Wednesday, 23 September 2015

கட்டாந்தரை

















காற்றலைந்த கட்டாந்தரை மேட்டில்
வீற்றிருந்த ஒற்றை மரத்தின் வேர்கள்
ஆழப் புதைந்து அகல விரிந்து
மண்ணின் சின்னச் சின்ன விரிசல்களை
இழுத்துப் பிடித்திருந்தன

என்றோ விதையூன்ற
காரணமாயிருந்த
கருங்குருவியின் சேயொன்று
தனதுரிமை எனக்கருதி
சிறு கூடொன்றை பணிந்திருந்தது

மரத்தின் பழங்களின்மேல்
மையலில்லாத மாரீசன்
குருவியையும் கூட்டையும் குறி வைத்து
அடிமரத்தை மாய்ந்து மாய்ந்து
வெட்டிக்கொண்டிருந்தான்

உடல்களைத்து உதிரம் சுண்டிப்போக
என்றோ வாங்கிவைத்து
எடுக்காமல் விட்டிருந்த
நஞ்சொன்றின் நினைவு வர
ஓடிச்சென்று எடுத்து வந்து
ஒவ்வொரு வேரிலும் விட்டு வைத்தான்

வீழ்ந்தது மரமும், குருவியும்
கூடும் மட்டுமல்ல
வேரிழந்த வெடிப்புகள் பெரிதாகி
கட்டாந்தரையே காணாமல் போய்விட்டது

Monday, 21 September 2015

இறைவன்

இரைஞ்சும் கரங்களில்
ஈகை புரிபவன்
புண்ணியம் பெறுவதன் காரணம்
பிச்சை பெற்றவர்
இறைவனாதலால்...

Friday, 11 September 2015

வண்ணக் கனவுகள்
















கருப்பு வெள்ளை இரவுகளால்
எப்படி அவ்வண்ணப் படிவங்களை
வரையமுடிந்ததென
நீண்ட நாட்களாக
எனக்குள் நிலைத்திருந்ததொரு கேள்வி

இரவுகளில் பெரும்பாலானவை நீட்சியற்றும்
நிலைகுலைந்தும் முடிந்திருந்தமையால்
பெரும்பாலான அக்கனவுகளின் பக்கங்கள்
அடிக்கோடிடப்படாத வார்த்தைகளால்
அவசரமாக நிரப்பப்பட்டிருந்தன

குற்றுயிராய் கிடந்த அவ்விரவுகளின்
வலியோசையில் விளைந்த
விழியோர நீர்த்துளிகளினால்
முக்கியமற்றவையெனும் கருத்தில்
கரைக்கவும் பட்டிருந்தன

இயலாமையிலும் கையறு நிலையிலும்
கசிந்த கண்ணீர்த்திவலைகளை
சுமந்திருந்த சிற்சில பகல்களின்
தொடக்க விளிம்பில் இழைந்தடங்கிய
ஒரு சில இரவுகளில்
பிறந்த கனவுகள் மட்டும்
வண்ணமயமாக இருந்தன

இயலாமையின் வெளிப்பாடாய்
ஏக்கமும் தாக்கமும்
சுமந்திருக்கும் கனவுகளெனில்
தம்மில் அவை வர்ணம் பூசிக்கொண்டதெப்படி

இயலாமை சுமந்த துடிப்புடன்
ஆழ்ந்த வலியையும் பொதிந்த
என்னைப் போன்ற இதயங்களின் கூட்டில்
நம்பிக்கை பூக்கள் மலர்ந்து
வண்ணங்களை நிரப்பியிருக்கலாமோ...!