Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, 27 October 2015

கன்னக் கதுப்பு



மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில்
நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்

சிறகுதிர்க்கும் பறவை



என் வார்த்தைகளுக்கிணங்க
சிந்தனை விடுத்து
ஒவ்வொன்றாய் சிறகுதிர்க்கிறாய்

வான் நிறைந்த மேகத்துகள்களிடையே
உன் பறத்தல் எளிதாயில்லையென அறிந்தும்

இடை நிறுத்தமில்லா பயணத்தில்
எவ்வாறேனும் தற்காலிக இருப்பிடம் தேடென்று சொல்லி
சிறகுகளை கவர்வதிலேயே கவனமாயிருக்கிறேன்.

அன்பு மொழிக்கு
அத்தனையும் தரத் தயாராயிருக்கும் நீ
தானிழந்தவற்றின் மதிப்பறியாததை போல
எந்தன் அன்பே அளப்பரிதெனெ புன்னகைக்கிறாய்

இறுதி இறகும் உதிர்ந்த பின்னரே உணர்கிறேன்
இனியொருபோதும் ஒட்டாத சிறகாய்
உன்னையே எனக்காக
இழந்துவிட்டிருக்கிறாயென..

Thursday, 22 October 2015

பதுக்கல்



விழித் திரையில்
நின்னை
பதுக்கிக் கொண்டேன்
மன வெளியில்
நீங்காமல்
சுழல விட..

Saturday, 17 October 2015

பிடிக்கும்



மடிசாய்ந்து
இன்சுவை கதை பேசி
இனித்திருந்த பொழுதொன்றில்

மெல்லிய மந்தமாருதத்துடன்
பவழமல்லி வாசமும் இணைந்துவர

அகம் நிரப்பி சுவாசித்த நொடி
அவளின் நேச சுவாசம்
அதனினும் மணமானதென சொன்னேன்

புன்முறுவல் பூத்து
கண்ணிமைகள் படபடக்க
கனிமுத்தமொன்று ஈந்து
ஆவலுடன் கேட்டாள்
தன்னை எவ்வளவு பிடிக்குமென

ஒரு நொடி
என்ன சொல்லவெனத் திகைத்து
மறுமொழி பகர்ந்தேன்
அவளுக்கென்னை பிடிப்பதைவிட
ஒருதுளி அதிகமென

சிலிர்த்த காற்றுதிர்த்த மலர்களுடன்
சிரிப்பையும் அவளுதிர்க்க
வெற்றிகொண்டவனாய்
வினவினேன்
என்னை எவ்வளவு பிடிக்குமென

நிஜப்பிரியை யவள்
நிதானித்துச் சொன்னாள்
நம்முடைய அன்பான
மகளை பிடிக்குமளவென்று

கவிதைகளும் கற்பனைகளும்
மகிழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கடிக்கலாம்

உள்ளத்திலுதிக்கும்
உண்மை வார்த்தைகளேயென்றும்
உறுதியாக நிலைத்திருக்குமென
உணர்ந்தபடி

என்னையறியாமலென் விழிக்கசிய
உப்பு நீரை உதடுகொண்டு
ஒற்றியெடுக்கத் தொடங்கினாள்...!

அடையாளம்


பிடிவாதங்களே உனது அடையாளங்களாய்
இருப்பினும்
அதன் அபிமானங்களே
என் பிடிமானங்களாய்...

நானுன்னை ஏற்கிறேன்

ஆனந்தம் நின்னகமெங்கும்
நிரந்தரமாய் 
நிறைந்திருக்கவேண்டுமென
நான் வேண்டியிருக்க

ஒற்றைச் சொல் கேட்டு
உருண்ட விழிநீர் மறைத்து
புறமிருந்து வந்தவனுக்கு
பொய்ப்புன்னகை ஈந்து நின்றாள்

இதய ஓசைகளின்
லயமறிந்தவனுக்கு
அவள் இயல்பிலில்லையெனத்
தெரியாமல் போகுமோ

கரம் பற்றி
இறுகணைத்து
நுதலிலென்னிதழ் பதித்து
என்னவாயிற்று என்றேன்

ஒன்றுமில்லையென
ஒளித்திருக்க முயல
மடியணைத்து
தலைகோதி
மீண்டும் என்னவென
யாசித்தேன்

மறுமொழியில்லையெனினும்
விழி திரண்டு
விடை சொன்னது

குறையற்ற மனிதனிக்
குவலயத்திலில்லை
குற்றம் சொல்லும் நபர்கள் தம்மை
திரும்பிப் பார்ப்பதில்லை

நீயென்னை
நிறைகுறையாய் ஏற்பதுபோல்
நானுன்னை
அப்படியே ஏற்கிறேன்

எத்துணை பேர்
குறை சொல்லித் திரிந்தாலும்
மற்றவரைப் பற்றிக்
கவலையெதற்கு

உன் அகிலமென நானிருக்க
ஆரணங்கே கலங்காதே
அன்பை மட்டுமே பொழிவேன்
ஆருயிரே வா என்றேன்

உடல் சாய்ந்து
உயிரொட்டிக்கொண்டாள்

Sunday, 11 October 2015

சிரிப்பழகி!



முத்துக்கள் சரம் கோர்த்து
மென்னிதழால் புன்னகை பூத்து
ஆழ்மனதில்
ஆயிரம் மின்னலை விதைக்கிறாய்
அறுவடை செய்து
நம் வாழ்வெலாம்
தூவி விட
கரம் கோர்ப்பாயா?

வண்ணக் கனவு



வெறுமையாய் இருந்த
என் கனவுலகில்
வண்ணம் பூத்து
புது மலர் வாசம் பரப்பி,
நேசம் கொண்டு
நினைவெலாம் மகிழ்வைத் தூவி,
வாழ்வினிமை கொள்ள
வைத்தவள் நீ!

Friday, 9 October 2015

குறிப்பேட்டில் பெயர்


















அந்த மேசை மேலிருந்த
வட்டக் கண்ணாடியின் மேல்
பரப்பப்பட்டிருந்த குறிப்பேட்டுக் காகிதத்தில்
நூற்றுக்கு சற்றே குறைந்த எண்ணிக்கையில்
பெயர்கள் வரிசை படுத்தப் பட்டிருந்தன

அதிகாலை பணிக்கு வந்த அலுப்புத் தீர
இருகை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு
எதிரில் வைக்கப்பட்ட தேநீரை உறிஞ்சியபடி
பெயர்பட்டியலை வாசிக்கலானான்

ஒவ்வொரு பெயருக்கும்
உள்ளத்தில் உயிரோவியமொன்று
எழுந்து கொண்டிருந்ததன் உவகை
முகத்தில் பிரதிபலித்தது

ஓரிரண்டு பெயர்களால்
நினைவுகள் தூண்டப்பட்டு
வருத்தங்கள் சில நொடியும்
மகிழ்ச்சி சில நொடியுமாக
மாறி மாறி மறைந்தன

சில பெயர்கள்
சிற்சில நிகழ்வுகளுடன்
இணைக்கப்பட்டிருந்ததால்
வேகமாக அவற்றை கடப்பது
எளிதாயிருந்தது

அவளின் பெயரை வாசித்தபோது மட்டும்
அகலிகையாய் உயிர்த்தெழுந்த
ஆனந்தக் கனவுலகம்
விழிகளுக்குள் விரிவடைந்தது

அடுத்தபெயருக்கு செல்ல
ஆவல் பிறக்காதிருக்க
வலுக்கட்டாயத்தினால்
கீழிறக்கிய பார்வையில்
விழுந்த அப்பெயரின்
வாசனை நாசியை தொடவில்லை

நெடு நேரம் உற்றுப்பார்த்தும்
நினைவுகளின் சண்டித்தனம்
அடிவாங்கும் அடிமாடாய்
அடங்கிக்கிடந்தது

எழுதப்படாத பக்கங்களாய்
வாசிக்கப்படாத புத்தகமாய்
முனைப்பில்லா பெருவெளியாய்
அழுந்தத் துடைக்கப்பட்ட மனப்பலகையாய்
நிர்மலமாக அது இருந்தது

குறிப்பேட்டை மூடி
கண்ணிமைகளையும் அடைத்தபடி
ஆழ்மனதில் அப்பெயரை குறித்த உணர்வுகளை
விசாரிக்கச் சொன்னான்

வெகு நேரம் கழித்து
விடையொன்று வந்தது
அப்பெயர் அவனுக்கே உரித்தானதென்று..

உனைத் தேடி



தெளிவற்ற வானம் தந்த
நிழல் பாதையில்
பூத்துவாலையாய்
நீர் திவலைகள் மேல் தெளிக்க
பாதச்சுவடுகள்
பதியாமல் நடந்தபடி நான்

வேட்கையற்ற பொழுதுகளில்
என்னுள்ளம்
விரவி கிடக்க
ஓசையற்ற சங்கீதம்
செவிகளில் மட்டும்

இதழ் தொட்ட
துளி மழை நீரில்
உன் விரல் தொட்ட
மருதாணி வாசம்
எப்படி வந்தது

நிலம் பதிந்த
நீர் திட்டுகளில்
விளக்கொளியின்
வர்ண ஜாலங்களிலும்
உன் புன்னகையே
பூத்து கிடக்கிறது.

கனவு தேசத்து பாதையிலே
கரம் பிடித்த வேளைகள்
மீண்டும் மீண்டுமென் நினைவில்
சுவை கூட்டப்பட்ட
செந்தேனாய்
சிதறி ஓடுகிறது.

மழை நீரில் நனைந்தாலும்
உள்ளுக்குள் தாகம்
ஊற்றாகப் பெருகி
உமிழ் நீரையும்
வற்றிப்போக செய்ய

துவளும் பாதங்களை
திருத்தி நேர் வைத்து
உனைத் தேடி
உனைத் தேடி,
இனியும்......