Saturday, 23 August 2014

நாகரிகம்
















எத்தனை இயலாமலிருந்தாலும்
எந்தன் தேவைகளை கவனிப்பதில்
என் தாயினுக்கு நிகராயவள்

அன்றும் அப்படியே,
அதிகாலை குளிர் நீரில் குளித்து
ஆலயம் சென்று வழிபட்டு வந்தவளின்
உடல் நோவு கண்டு
உற்சாகம் குன்றியிருந்தாள்

ஆயினும் என்மேல்
அக்கறை கொண்டவளாதலால்
அடுப்படி வேலையில்
அமிழ்ந்திருந்தாள்.

இரவு படுக்கையில்
என்னருகேயவள்
கால் வலியென
முனகிக் கொண்டிருந்தாள்.

கால்வலி கைவலியென
நான் கருதும் முன்னரே
கால் பிடித்துவிட, கை பிடித்துவிட
துடிப்பவள்

அவள் முனகுதல் கண்டு
காலைத் தொட்ட வினாடி
பதறிக் காலை
இழுத்து மறைத்துக் கொண்டாள்.

எனினும் விடாது
தென்னமரக்குடி எண்ணையெடுத்து
தடவி பிடித்து விட்டு
வலி குறைந்ததென அவள் உணர்த்திய பின்புதான்
உறங்கினேன்

நாகரிகம் வளர்ந்து
நாடு மாற்றுபாதையில் போவதாய் சொன்னாலும்
கண்கலங்கியபடியெனை
கட்டிக்கொண்டவளின்
காதல் உணர்த்தியது இல்லையென்று..!

Friday, 22 August 2014

ஏங்குகிறேனடி



கருவிழிகளில் ஒளிசிதற
கன்னக் கதுப்பு வழி புன்னகை மிளிர
சிந்திய சிரிப்பலையை
நாளும் காண நான் ஏங்குகிறேனடி!

ஸ்படிகம்

















எங்கும் வியாபித்திருந்த மனக் கடலின் 
ஆழ்நிசப்தத்தில் அமிழ்ந்திருந்த கல்லொன்று
வெளிச்சபூமியின் நிகழ்வியாதிகளை ருசிக்க
மேல் நோக்கிய நீண்டதொரு பயணத்தைத் தொடங்கியிருந்தது.

ஆழ்ந்திருந்த வேளைகளில் 
அதன் தூய்மை எப்போதும்
உப்பு நீரால் துலக்கப்பட்டிருந்ததால்
எவ்வொளியையும் பிரதிபலிக்கும்
அகத்தூய்மை புறங்காட்டும்
ஸ்படிகமாய் மாறியிருந்தது.

அமிழ்ந்து அமைதி கொள்ள
அறிவுறுத்தல்களின் மத்தியிலான
மேல் நோக்கு பயணம் அத்தனை எளிதாயில்லையெனவும்
வேகமிருப்பினும் விவேகமில்லாததெனவும்
விவாதங்கள் நிகழ்ந்தன.

நீரலைகளின் ஓவென்னும் இரைச்சலையும்
நீக்கமற நிறைந்திருந்த நோய் வளர்க்கும் கிருமிகளையும் கடந்து
புறம் வந்து விழுந்த ஸ்படிகத்தின் ஒளிகண்டு
புறஞ்சொல்லிக் களிக்கும் புழுத்த அழுக்குகளும்
பொறாமைக் கனலில் புடம்போடப்பட்ட இன்னபிற வஸ்துக்களும்
அவசர மாநாடு கூட்டி
சிதிலமடைந்திருந்த இயற்கையை அழைத்து
விரைவாய் பணிமுடிக்க ஆணையிட்டன

ஏகாந்தப் பெருவெளியில்
தனதழகைக் காண்பிக்கவியலாத ஒவ்வாத சூழலில்
தனித்தன்மையை
சிறுகச் சிறுகப் பறிகொடுக்கத் தொடங்கியிருந்தது
சுகங்களென கைப்பற்றி
சுவைக்கத் தொடங்கியவை
சங்கடம் தரும் சக்கைகளென
உணரத் தொடங்கியிருந்தது.

அக அழகைக் கண்டு உணர்ந்து
தன்னை எடுத்து பாதுகாக்க வரும்
அந்த தேவ கரங்களின் வருகைக்காய்
தவமிருக்கவும் தொடங்கியிருந்தது.

Tuesday, 19 August 2014

அசரீரியாக


இருள் சேர் கொடு வனந்தனில் புகை சூழ் கருமரமிடை 
மருள் நீங் குற நடை பயின்றே. மனம் துணிந்தே புது யுகம் தேடிட 
அருள் தானென ஒளிப்பிழம்பென ஆங்கோர் திகழ் வந்தே மெல 
விருப்போ அதில் வெறுப்போ இலை வியப்பே எனைத் தொடரல் கொள 

மதியிடை வந்து கெஞ்சும் சுடும் பிறழ்களில் இளநெஞ்சே என
விடுபடு வென யெந்தன் மன யிசை அசைவுகளதில் முந்தி யெழ
தடை சிதறிட என்னுள் பல மணம் பரப்பிடும் எண்ணம் எழ
வெண்பனியுறை மேகம் கார் முகில் மறைந்திட வான் பரவிட
எந்தனுயர் நிலையிதுவேயென்றொரு அசரீரியாக..!

Friday, 15 August 2014

கோபம் களை





வெந்தணலில் மூச்சிழைத்து
வேர்களிலும் கனலிட்டு
காந்தம் உறை கண்களிலே
கடுங்கோபப் பதியமிட்டு
சாந்தமிலாச் சொற்சரங்கள்
சல்லடையாய் துளைகொள்ள
ஏந்திழையாள் என்னெதிரே
எரிமலையாய் நின்றிருக்க

அன்புமழை ஊற்றெடுத்து
அகம் நிறைந்த மங்கையிடம்
இன்பமுள வாசகங்கள்
எடுத்தியம்பித் தளர்ந்த பின்னும்
தென்பொதிகைக் காற்றினிலே
தீப்பந்தம் சுமந்தவளின்
மென்மனதின் கோபங் களை
முறைவேண்டி தவித்திருந்தேன்

பிழையேதும் செய்திலேன் ஞான்
பேரன்பின் விதையே நான்
மழைவேண்டும் மயிலாக-உன்
முகங்கண்டு மகிழ்ந்திருக்க
அலைபோல வேலை பல
அடுத்தடுத்து வந்தவுடன்
சிலைபோல நின்று சில
செயல்கோர்வை சிதறவிட்டேன்

கனியே யென் முகங்கண்டு
கண நேரம் கோபம் களை
உனையே யென் உயிராக
உடுத்தே னதை நினைவில் விதை
அணியே உன் சினங்குறைத்து
அன்பென்னும் ஆற்றில் நனை
எனையே யுன் சேயென்று
என்னாளும் நெஞ்சில் நினை.

நிழல் நீரலை

















கருமை படர்ந்த அதிகாலை பொழுதொன்றின்
சூரியச் சுடர் தேடும் கமலத்தின் பின்னசைவில்
விழி சுமந்த கனவுகளின் வெளிச்சக் கோடொன்றின் வீரியத் தாக்குதல் 
நிழல் நீரலையொன்றை பரிணமித்திருந்தது.

வான் தெளித்த தூறல்களில் விளைந்த புதிய அலைகளில்
நிழல் நீரலை நீர்த்துப் போனதால்
கமலம் தன் மலர்ச்சி தடை பட்டிருந்ததாய்
குற்றப் பத்திரிக்கை தயாரித்திருந்தது.

தூர கிழக்கில் தோன்றியவனின் கதிர் வீச்சில்
கட்டவிழத் தொடங்கிய கமலம்
மழை நீர்த்துளிகள் விலக
கனவு விதைத்த நிழல் நீரலை
மறைந்திருந்தாலும்
அழிந்திடாமல் அங்கேயே காத்திருந்ததைக் கண்டு
அகமகிழ்ந்து மணம் பரப்பத் தொடங்கியது.

அடைபட்ட கோழிக்குஞ்சுகள்


















அந்தக் கூட்டத்தின் மத்தியில்தான்
அகப்பட்டிருந்தேன்
அடையாளங்காண வண்ணம் பூசியிருந்தார்கள்
எட்டிலக்க எண்ணொன்றை
மனனம் செய்யச் சொல்லியிருந்தார்கள்

உணவைப் பெறவேண்டி
ஒழுங்கில் வரப் பழக்கியிருந்தும்
முண்டியடித்து முன்னேறவே
முயற்சித்திருந்தோம்

பற்பசை தின்றதாக ஒருவன்
பலப்பம் திருடியதாக ஒருவன்
அடுத்தவளைக் கடித்ததாக ஒருத்தியென
சிலரை மட்டும்
தனிக்கோடிட்டு பிரித்திருந்தார்கள்

அடைபட்டக் கூண்டிற்குள்
எத்தனை நேரம்தான் இருப்பதென அறியாமல்
புறம் சென்று விளையாட வழியும் இல்லாமல்
இடித்துத் தள்ளி
கிசுகிசுத்திருந்தோம்

தப்பிப் போன குஞ்சொன்றை
பொல்லாத பருந்தொன்று
சிதைத்து இறையாக்கியதாகவும் கேள்வி.

புரியாத பருவத்தில்
அறியாத செயல்களைச் செய்யாமல்
அடைபட்டுக் கிடப்பதே மேலென எண்ணி
கோழியும் சேவலும் கூறிச் சென்றதால்
இதுதான் எமது உலகமென எண்ணிக் கொண்டிருக்கிறோம்