Wednesday, 22 October 2014

நினைவுகளில் நீ

















விழிகளில் சிறைவைத்தும்
நினைவுகளில் கொலுவைத்தும்
புலரும் பொழுதுகளிலுனைக் காணவே விழைகிறேன்
அவை இருளைப் பூசியே நிற்கின்றன.

பாழ்மனது




















கட்டுத்தறிக்குள் கட்டுப்படாதவற்றை
விட்டுவிட விரும்பாமல்
எட்டிப்போகாதவரை துர்லபமில்லையென்பதால்
விட்டுப் பிடிக்கலாமென எண்ணி
கட்டுத்தளைகளை தளர்த்தியவுடன்
சுற்றித்திரிந்து
சொர்க்கமெது, நரகமெதுவென அறிய ஆவல்கொண்டு
அத்தனையிலும் கைவைத்து
சுட்டுக்கொண்டது,
சுகமும் கண்டது
உற்றத்துணையெனவே உடன்வந்தவரோ
சித்தம் பிறழ்ந்து
எங்கும் அலைகிறதென வருந்தி
வட்டமிட்டு அதனுள் வசிக்கப் பணிய
முற்றும் துறந்தவரும்
கற்றுத் தெளிந்தவரும்
எல்லைத்தொடுமுன்னே
கண்ட வழியிதுவெனச் சொல்லி
தன்வழியே செல்லத்
துடிக்குதந்தப் பாழ்மனது

யார் வென்றது

உன்னிரு விழிகளின்
ஒளிக்கூட்டிலெனை சிறை வைக்கிறாய்.
உல்லாச பிழம்புகளின் உச்சாடனத்தில்
என் விழியம்புகளை செயலறுக்கிறாய்.
தோற்றோடாமல் அடைபட்டவென் கரங்களை
பாசக்கயிற்றால் பிணைக்கிறாய்
தப்பியோடாமலிருக்க வென் கால்களில்
அன்புச்சங்கிலிகொண்டு பூட்டுகிறாய்.
உயிர்சுவாசம் செல்லும் நாசிகளில்
உன் மூச்சுக்காற்றை நிரப்பி யெனை
உன்மத்தனாக்கி
செயலற்ற கைதியாய்
வதம் செய்கிறாய்.
இதயப்பாசறையில்
சிம்மாசன மிட்டு அமர்ந்து
எனது ராஜ்ஜியமென
ஓங்காரம் செய்கிறாய்.
அடையாள மிழந்த வெனக்கு
உன்னையே ஒப்படைத்து
உயிர்த்தெழச் செய்கிறாய்.
இறுதியில்,
உனை வென்றது நானா?
எனை வென்றது நீயா?
நமை வென்றது நம் காதலா?

தோழமைக்கரங்கள்

























துடைத்தெடுத்த நீலவானத்தில்
எல்லைகளை காவல்காத்த
தும்பைப்பூ மேகங்களே என் பெற்றோர்
கடலும் வானும் தொடுமிடத்தில்
தொடங்கியதென் பயணம்
நீர்மேல் நீந்தியலையும்
காற்றலைகளே எனது வாகனம்
உவர்ப்பையுண்ட துளிகளேயென் ஆகாரம்
கடுங்குளிரோ
அதிவெப்பமோ
தொடர்மழையோ
எனது யாத்திரையை நிறுத்தியதில்லை
எனக்கென ஒரு பர்ணசாலையை
நிர்மாணித்த குரு
எட்டாத உயரத்தில் வைத்து
அவரே என் ஏணியாகவும் இருக்க
ஏற்றங்கண்ட என் பயணத்தில்
வீழ நேர்ந்தபோதெல்லாம்
தூக்கிவிடும் தோழமைக்கரங்களுடன்
இனியென்ன கவலை?
எட்டுவதற்கு இன்னும் சில படிகளே!

எது மகிழ்வு



தனை வருத்தியெங்கிலும்
எனை மகிழ்விக்க நீ துடிக்க
எனது மகிழ்வே நீதானென
அறியாயோ?

பரிதவிக்கட்டும் மனம்



தனித்த இரவுப்பொழுதொன்றின் வாசனையை நுகர்ந்து
கனவு படுக்கையில் கால் நீட்டியபடி
தத்துவார்த்த சிந்தனைக்கு பதில் தேடிகொண்டிருந்தேன்.
நூற்று கணக்கில் கேள்விகள் நெஞ்சை துளைத்திருந்தபோதிலும்
உள்ளார்ந்த ஒருகேள்விக்கு மட்டும் விடைதேடி 
ஊர்வலம் போயிருந்தது மனசு.
நூலறுந்த பட்டமாய்
மேகக்கூட்டத்தில் களைப்புற்று இளைப்பாறிய மனதை
மானுடப்பிறவியில் மாளும்வரை
இரைச்சலின்றி இருக்கவியலாதெனன சொல்லி
பிடித்திழுத்து பட்டியிலடைத்தேன்.
இனி நான் மேலும் இளைப்பாறலாம்.
மனம் மட்டும் மேலும் பரிதவிக்கட்டும்...!

Sunday, 12 October 2014

பேரழகி





















ஒவ்வொரு நொடியும்
உள்ளத்தில் வண்ணக்கலவையை வாரியிறைத்து
கண்ணுக்கு குளிர்ச்சியாய்
காட்சிதரும் பசுஞ்சோலை பேரழகி

எண்ணமும் செயலும்
வெளிச்சத்தை வீச மலர்ந்திடும்
வெண்தாமரை பூவழகி

கற்பனைக்கெட்டா
கருணை மழை பொழியும்
மஞ்சள் நிற தெய்வீக வடிவழகி

நிந்திக்க வருவோரை
நெருப்பென சுடும்
செந்தணல் சிவப்பழகி

அனைத்தையும் ஆட்கொள்ளும்
அண்டமாய் திகழும் அன்புநிறை
கருநீல கண்ணழகி

தனியறையில் தனக்குள்ளே
புழுக்கத்தை மறைத்து தத்தளிக்கும்
கருங்கூந்தல் பெண்ணழகி

என்னவளே உன்னிடத்தில்தான்
எத்தனையெத்தனை வண்ணங்கள்
சுந்தரியே, முந்திரியே,
சொக்கவைக்கும் விண்மதியே,
புன்னகை பூச்சூடி எப்போதும் வாழ்ந்திடடி

என்வாழ்வில் நீ வந்ததனால்
என்னெண்ணங்களும் வண்னமயமானதடி
எப்படி நான் நன்றி சொல்வேன்
இனிய காதலை பொழிவதன்றி..!