Saturday, 20 June 2015

இனிய தந்தையர் தின வாழ்த்து

















உன்னில் உதித்தவனென் உணர்வைப் படித்தவன் நீ என்றும் நானுமது உம் மகவாய் உடனிருக்க நான் நானாகவே சிறக்க துணை நிற்கும் முதல் தோழன் நீ
அரிச்சுவடி அறியுமுன் அறிவறிவித்த முதற்கண் ஆசான் நீ தாயகன்ற பொழுதுகளிலன்றி 
தனிமையுணரும் நொடிகளுக்குள் 
தவமாயிருந்திட்ட 
எந்தாயுமானவன் நீ
எந்தையே இன்னுயிர் தந்த நீயே 
எனக்கு எல்லாமுமாய் நெடிதுயர்ந்து நின்றாயே...
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

புதுமை தமிழினி


கருத்தாய்வு

புதுமை தமிழினி

எனது அன்புத் தங்கை. இரு வருடங்களாக எனக்குப் பழக்கம். முக நூலில் முதன்முதலில் சகோ கவி முகிலன் பக்கத்தில் எனக்கு அறிமுகமானார். அப்போதே எழுத்தார்வம் இவருள் சுனையூற்றாய் இருப்பது கண்கூடாகத் தெரிந்தது.

தமிழ் ஃபாண்ட் இல்லாத நிலையிலும் சின்னச் சின்னக் கவிதைகளை ஆங்கில எழுத்துக்களை கொண்டே எழுதிவந்தார். ஒரு முறை கேட்டபோது விரைவில் புது மொபைல் வாங்கி தமிழில் எழுதுவேன் அண்ணா என்று சொன்னார்.

அவ்வாறு தமிழில் எழுத்த் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை இவரது எழுத்தும் அதன் கருத்துக்களும் ஒவ்வொரு நாளும் பலரும் அதிசயிக்கத் தக்க வண்ணம் வளர்ந்துகொண்டே இருக்கிறது

ஒவ்வொரு நாளும் இவரது கவிதைகள் புதுப்புது கருத்துக்களுடன் மிளிரும். சமூக எண்ணங்கள் அநாயாசமாக இவரது கவிதைகளில் நமது சிந்தனையை அசைத்துப் போடும்.

காதல் கவிதை மட்டுமே பெண்கள் எழுதுவார்களோ என பலரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இவர் தனது எழுத்துக்கள் மூலமாக ஒரு சமுதாய மாற்றத்தை விளைவிக்க முடியுமெனும் நம்பிக்கையுடன் எழுதுபவர் போன்று எனக்குத் தோன்றுகிறார்,

அலங்கார பொம்மையாய்
பட்டுக்குள் புதைந்த படி


என்னும் கவிதையில் வரதட்சிணை வாங்க வந்திருக்கும் மாப்பிள்ளைக் கூட்ட்த்தை அடித்து விரட்டாத குறைதான். ஆஹா அதன் பாங்கே தனி.

வடை சுட்ட கதை சொல்லும் பாட்டி,,
வாலாட்ட காது திருகும் தாத்தா,,


என்னும் கவிதையில் இவர் குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தையின் அவலத்தை சொல்வதை வாசிக்கும் எவரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது

சற்றுமுன்
முன்நெற்றி
வருடிப் போன


என்னும் கவிதையில் கல்லூரி நட்பை நினைவு கூறும் விதம் மிக அழகு

இவ்வாறு பல்வேறு கோணங்களில் எல்லா தளங்களிலும் பயணிக்கும் இவர் விரைவில் தனது கவிதை தொகுப்பை வெளியிடப் போவதாக சொல்லி இருக்கிறார். அதனை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பு அண்ணன் என் ஆசி இவருக்கு என்றும் உண்டு.

நீங்களும் வாழ்த்துங்களேன்..!

காதல் கொள்ளும்

மின்மினிப் பூச்சியென மிதந்து வந்தனளென்
மென்மன முழுமையுமாய் பரவி நிறைந்தனள்
பன்மொழிப் பாவலரும் எழுதாக் காவியமா மிப்
புவன மெங்கிலுமே வரையா ஓவியமே

அன்ன நடை தளர ஆடும் மலரமுதம்
அலங்கு மதன் மேலே இலங்கும் விழி சுழலும்
பின்னல் முன்வருங்கால் மேடை கண்டதென
பாதம் பாவு மொரு நடனப் பேரழகும்

செந்நிறக் கோவையிதழ் சிந்தும் புன்னகையும்
செங்கண் வரி மலர பொங்கும் ஒளிமழையும்
கன்னக் கதுப்பினிலே திளங்கும் கனியழகும்
காதல் கொள்ளுமெனை கொல்லும் அனுதினமும்

நுதல் வழி ஒத்தடம்





உயிர் கொண்டு நுதல் வழி ஒத்தடம் தந்தாய்
இருவிழி கரைந்திட இதயத்தை வென்றாய்

நிகழ்வின் சுகம்














உறக்கமில்லா இரவின்
தடித்த விழியிமைகளை
குளிர் நீரிட்டுக் கழுவி

அதிகாலையே தோட்டத்திற்குள்
அவசரமாய் சென்று
புதிதாய் பூக்கத் தொடங்கிய
பல்வகை மலர்களிலொன்றோடு

தனிமைச் சுவடுகள்
பாரமெனக் கொண்டயென்
தவிப்பின் கனவுகளுக்கு
விளக்கம் கோர

பின்னிருந்த மாமரங்களில்
குடியிருந்த குயில்களிரண்டு
குக்கூவென சொன்ன பதிலின்
விளக்கம் புரியாமல் விழித்து

நள்ளிரவின் மென் தூரலில்
வீழ்ந்திருந்த மழைத்துளிகள்
பனிப்பூவாய் விகசித்து
செய்த கண்சிமிட்டல் பதிலின்
அர்த்தம் புரியாமல்
அலுத்து நின்றபடி

குளிர் மேகக் கொஞ்சல் கழிந்து
இலை வருடி மலர் மேனி தழுவி
இன்பத் தேனெங்கும் பருகி
எனை நாடி
மனமாற்றம் கொள்ளெனச் சொன்ன
வாடைக்காற்றின் மீதும் சலிப்புற்றவாறு

அகம் செல்ல பாதமெடுத்த
என் கால் பற்றிய கொடியொன்று சொன்னது

தனிமை தவிப்புகள் தற்காலிகமே
இனிமை பிறப்புகள் எக்காலமுமே
பழந்தமிழ் மீது காதல் கொண்டவனின்
வாழும் வரிகளில் நேசங்கள் காண்பாய்

விழி திறந்து
வெளிச்சம் கண்டு
வாழ்வில் விருப்பம் கொள்
கனவுகளில் இனி
கவிதை மாத்திரம் காண்பாய்
கற்பனையை விட
நிகழ்வில் சுகம் காண்பாய்…!

மதுவந்தி கார்த்திக்




கருத்தாய்வு
அன்பான சகோதரத் தோழமை பூண்ட இவர் எனக்கு அறிமுகமாகி மிகக் குறைந்த காலம்தான் இருக்கும். அதிகம் பேசாமல் அவரது ஆற்றல் மிகு சிந்தனையையும் எழில்மிகு வரிகளையும் மட்டுமே பேச வைப்பார்.
தொடக்கத்தில் சிறு சிறு கவிதைகளாய் எழுதிக்கொண்டிருந்த இவர் எனக்கு ஒரு சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர் என புலப்பட்டது எனது பக்கத்தில் நானொரு படம் கொடுத்து அன்புத் தோழமைகளை கவிதை எழுதும்படி கேட்டபோதுதான்
அநாயாசமாக அத்தனை கவிதைகளை அதுவும் மாறுபட்ட வெவ்வேறு கோணங்களில் ஒரு படத்திற்கே எழுதி நட்புக்கள் அனைவரையும் அசத்திவிட்டார். அதன்பின்னர் நானும் அன்னாரது பக்கங்களில் அவரது பதிவுகளை தொடர்ந்து கவனிக்கலானேன்
மிக எளிமையான சொற்களால் ஆழ்மனதிலுறையும் அத்தனை வேதனை வலிகளையும் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர்.
அன்று
த(க)ண்ணீரில்
தத்தளித்த எறும்பாகிய எனைக் காப்பாற்றிய
ஒற்றையிலையான
உனதன்பு
இன்று
வெயில் பட்டால்
சுருண்டிடும்
எலும்பில்லா
புழுக்கள் போல்
உன் நிராகரிப்பில்
என்னும் கவிதையில் நிராகரிப்பில் சுருண்டுபோகும் உள்ளத்தை புழுவினோடு ஒப்பிட்டது மிகச் சிறப்பு.
காதல் கொண்டு
உறவு கொண்டனர்...
உறவு கொண்டதும்
காதலைக்
கொன்றனர்...
எனும் கவிதையில் மிகக் குறுகிய வரிகளில் இன்றைய அவலக் காதலின் நிலையை அழகாகச் சாடியுள்ளார்
முகநூலும்
இற்றாகிவிட்டதோ
எனத் தொடங்கும் கவிதையில் முக நூலின் பல பதிவுகளின் தரம் தாழ்ந்து போயிருப்பதை வேதனையுடன் மொழிந்திருக்கிறார்.
இவ்வண்ணம் பலப்பல படைப்புகளை பலப்பல எண்ணச் சிதறல்களை உள்ளடக்கி படைத்து நமக்கு விருந்து படைக்கிறார்.
இவரது படைப்புத்திறன் மென்மேலும் வளர நாம் வாழ்த்துவோம் வாருங்கள்.

கைக்கிளை காதல்

















முன்பிருந்த பூந்தோட்டத்தில்
பூத்துக் குலுங்கியிருந்த மலர் கூட்டத்தில்
அதனோடு இனிமை பேசியிருந்த
செம்பருத்திப் பூவினிதழ் சற்றே வாடியிருந்தது

முன்வாசலை அடுத்து
பரந்திருந்த சாளரத்தை மூட வைக்கப்பட்டிருந்த
கண்ணாடி தடுப்பிற்கு
அம்மலருடன் எத்தனை கதை பேசினாலும்
தீராததாகவே தோன்றியிருந்தது

சட்டென்று துளிர்த்த
சில மழைத்துளிகள்
தன் மீது விழுந்து
நழுவி
கீழே விழ

காதல் மலர்மீது வீழ்ந்த துளிகளோ
இதழ்களில் தங்கி இன்புற்றிருக்க
செம்பருத்தியும் சிலிர்த்து தலையாட்டி
புத்துணர்வு கொண்டதாய்
புன்னகை பூக்க
தன்மேல் அசூயைகாற்று படர்வதாய் உணர்ந்தது

பின் தொடர்ந்து
படபடவெனக் கொட்டியப் பெருமழையில்
வழிந்த துளிகளை விலக்கிய கண்ணாடி
அன்பு மலரை விழித்து நோக்க
செம்பருத்தியோ
சிதறிய இதழ்களை தரையில் பரப்பி

பொழிந்த மழையும்
புன்னகை மலரும்
இறைவன் வரமெனச் சொல்லி
மீண்டும் பிறப்பினும்
கைக்கிளை காதல்
கனவேயென அறிவுருத்தி
வேதனை மொழிந்தது