Tuesday, 16 December 2014

தேவாமிர்தம்

பளபளத்த வெங்கலக் கும்பாவில்
வாரியிட்டப் பழஞ்சோற்றில்
பிழிந்தெடுத்த கைப்பிடி சாதத்தில்
மையமாயொரு குழி செய்து
சுண்டவைத்த புளிக்குழம்பையொழித்து
அள்ளி வாய்வைத்து ருசிக்கும் பாட்டியிடம்
எனக்கொரு வாயென்று விளம்பினேன்.

வாடா ராசாவென
வாஞ்சையாய் ஊட்டிவிட
வாய்கொள்ளாச் சோற்றை
எச்சிலொழுகத் தின்றயெனக்கு
இன்றும் அச்சுவையின்
அமுதம் கிட்டவில்லையென
ஆதங்கம்தான்
ஒருவேளை அதுதான்

தேவர்களின் தேவாமிர்தமோ

தண்டவாள சத்தம்


















தடதடத்த இரயிலின் சத்தத்தில்
திடுக்கிட்டெழுந்து
தன்னவளைக் கூவியழைத்தபோது உணர்ந்தான்
தனித்திருப்பதையும்
சப்தித்தது இரயிலல்ல,
மின்விசிறியெனவும்..

ஒவ்வோர் இரவிலும்
தண்டவாள ஓசைகேட்டு
உருண்டுவந்து ஓட்டி
கரங்களுள் கரைபவளைப் பிரிந்த
ஒற்றையிரவிலேயே
தான் உறக்கமின்றி தவிப்பதையுணர்ந்து
அவளையழைக்க கைபேசியெடுத்தவன்
உறக்கத்திலெழுப்புதல் தவறென
ஒத்திவைத்தான்

இரவுமுழுதும்
எண்ணற்ற கவிதைகளை
எழுதியும், வாசித்தும் கழித்தவன்
இறுதியில் எப்படியோ
தன்னிலை மறந்து போனான்

காலையிலெழுந்தவன்
கடமைகளில் தன்னை மூழ்கவைத்து
மாலையில் வீடு திரும்பி
கதவைத் திறந்தவளைக் கண்டதும்
வாடி வண்ணமிழந்த மலர்முகம்
இரவில் உறங்காது
தன்னைப்போல் தவித்திருந்ததையுணர்ந்து
வாரியணைத்து
முத்தமழை பொழியத் தொடங்கினான்..!

இன்றையயிரவின்
தண்டவாள சத்தத்திற்காய்
காத்திருக்கத் தொடங்கியது

இருவர் மனதும்..!

வானம் கருமையடையத் தொடங்கியிருந்தது.
















வலிமிகுந்த கணங்களிலொன்று
மடிமீது வீழ்ந்திருந்தது

சற்றுமுன்னர்தான்
சந்தோஷத்தின் சாம்ராஜ்யத்திலவன்
வீற்றிருந்தான்

உடையுதறி எழுவதற்குள்
உள்ளும் அதன் ஜ்வாலைகளை
பரப்பத் தொடங்கியிருந்தது

விரல் நுனிகளிலது
அழுக்காறாகவும்
விழி முனைகளில்
ஆற்றாமையாகவும்
வடியத் தொடங்கியிருந்தது

இருப்பை இறுகப் பற்றிக்கொள்ள எத்தனித்ததில்
இருக்கைகளில் தீப்பற்றி
கால்கள் கரைந்தொழுகத் தொடங்கின

அன்புக் குளத்திலமிழ்ந்து
தற்காத்துக்கொள்ளத் துடித்தவனின் பார்வைக்கு
தற்சமயம் அத்தனையும்
தூரத்துக் கானலாகவே தெரிந்தன

அடுத்த நொடியே
பெருமழையொன்று பெய்யக்கூடுமெனும்
பேராசையுடன்
நிகழ்காலத்திற்கும்
எதிர்காலத்திற்குமாக
நீச்சலடித்துக் கொண்டிருந்தான்


வானம் கருமையடையத் தொடங்கியிருந்தது..!

அந்தரத்தில்


















எங்கிருந்து வந்ததென்று அறியாத ஒளிச்சிதறல்களில்
எனை இணைத்துக்கொள்ளும் ஆவலுடன்
ஒற்றைப் பிழம்பை இறுகப் பற்றி
எனதிறக்கைகளையும் விரித்துக்கொண்டேன்

மனோவேகத்தையும் மிஞ்சியதொரு வேகத்தில்
பூலோகத்தை கடந்து
விண்ணிற்குள் புகுந்து
வேற்றுக் கிரகங்களில் சஞ்சாரம் செய்யத் தொடங்கியது

அண்டத்தின் விளிம்பையடைந்த நிலையில்
சிற்றொளியாயிருந்த அப்பிழம்பு
அதனையொத்த ஒளிக்கற்றைகளுடனிணைந்து
பேரொளியாகப் பிரகாசிக்கத் தொடங்கியது

அண்டத்தைக் கடக்க
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நானங்கே

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தேன்.!

கேள்வி




















சுழன்றடித்த பேராசை சூறைகாற்றில்
அகப்பட்ட மேகத் தூவல்களை
மென்மையென மெத்தனமாய் நினைத்திருக்க
அவையோ கடுங்கோபக் காற்றாய்
கபளீகரஞ்செய்யத் துடித்தது கண்டு

நங்கூரமிட்ட மனக்கால்களை
நாற்புற நதியலைகளில் மூழ்கவிடாமல் நிறுத்தி
நல்லெண்ணக் கரங்கொண்டு
சுழல்காற்றைப் பற்றிச் சுழற்றிவிட

அகண்டு விரிந்து
கட்டுத்தளையறுத்து
கைப்பற்றியிருந்த கள்ளத்தனங்களை
வான்மழையில் கரைத்து
உதிர்க்கத் தொடங்கியது

மேல்விழுந்த துளிகளில்
ஒன்றிரண்டு கண்ணீர் முத்துக்களுடன்
பொறாமைப் புழுதியும் கரைந்திருக்க

மாசுடுத்திய மாண்பு கொண்டு
மாய்க்கத் துடிப்பவைகளை
வாழ்த்துப் பாசுரம் படிப்பதா
வெறுத்துப் பழிப்பதாவென

கேள்வியிலாழ்ந்தேன்

மரணமென்றது

















பரந்து விரவிக் கிடந்தவொன்று
கருவென்று உடலுடுத்தி பிறப்பென்றது

உணர்வுருவின் வசமாகி சுயமிழந்தது
உறவுகளின் பிணைப்பில்
திளைத்து நின்று சுகமென்றது

உற்றவை பெற்றவை
கற்றவை கொண்டு
வெற்றியென்றது

இழந்த நொடித்த
பதறிய சிதறிய கணங்களில்
துயரென்றது

சலிப்புற்று ஓர் நாள்
உடலுடைவுதறியெறிந்து
புறப்பட்டு
உலவுதலற்ற உறைதலாய்
நிலைத்தன்மை கண்டுவிடயேன்

மரணமென்றது..