Monday, 22 September 2014

காதலின் எல்லை


கருமேக மெடுத்து கூந்தலென இழைத்து
இருவிழியில் மின்னல் ஒளி சிந்த அணைத்து
வழிகின்ற கண்ணிற் கணை யொன்றை முடித்து
தெளியாத வானாய் தன் பார்வை கொண்டாய்.

பிரிவில்லை காதல் உணர்வுக்கு என்றும்
விடைபெற்ற காதல் நெஞ்சத்தில் தஞ்சம்
மொழியற்றுப் போன நிமிடங்கள் சொல்லும்
கொடிமுல்லை யுந்தன் அன்பிற்கென் நெஞ்சம்

உயிர் தொட்ட காதல் உருவான தென்று
உனில் வாழுமெந்தன் உயிர் கண்ட பின்பு
உளத் தேடல் செல்லு வழியெங்கு முந்தன்
நிழல் பூத்து நிற்க நிஜமென்று கண்டேன்!

புரிகின்ற வாழ்வில் தவமொன் றுமில்லை,
புரியாத பேர்க்கு வாழ் வொன்றுமில்லை,
விரிகின்ற வானின் எல்லைக்கு ளில்லை
வழிந்தோட கண்டேன் காதலின் எல்லை!

உதவுமே



















நினைவுகளின் ததும்பல்களில்
நீளுமென் இரவுகள்
கனவுகளின் காத்திருப்பில்
புலருமென் விடியல்கள்

தொலைந்திடவும் தொடர்ந்திடவும்
தொடர்பில்லா நிகழ்வுகள்
பருவ நிலை கடந்த பின்னும்
பயிரிடாத உணர்வுகள்

ஏக்க சுழல் எனை வருத்த
இயல்பிழந்த சிறகுகள்
புனைமுகத்தின் வெளிக்கொணரா
சுயமிழந்த சிதறல்கள்

நீண்டதொரு அரவணைப்பின்
நிழல் சுமந்த சுவடுகள்
நித்தமெந்தன் வாழ்விலே
நீர் சுமந்த கோடுகள்

நீயெனக்கு வாழ்க்கையின்
இறந்தகாலமெங்கிலும்
உனை சுமந்த நெஞ்சுடன்
உயிர் சுமக்க உதவுமே!

Friday, 19 September 2014

எனதெழுத்துக் குடைகள்

















கீழ்திசை வானில் ஆழிப்பேரலைகளெழுந்து
காதல் கொண்ட கொண்டலைகளுடன் கலந்து
சண்ட மாருதத்தின் சாயல் கொண்டன

இடி மின்னல்களை தன்னுள் பொதிந்து
எனது தற்காப்பு எல்லையை
தகர்க்கும் எண்ணத்தில் விரைந்தன

ஆதவனோ அவசரமாக விடை பெற்றிருந்தான்
கொடுங்கோலனின் வீச்சுக்கு
இரையாவேனோவென்று
என்வனத்து மரங்கள் தாண்டவமாடின.

சீறிய சந்தேக இடிகளும்,
வெட்டிய விஷம மின்னல்களும்
கொட்டிய கேள்விக்கணைத் துளிகளும்
என்மேல் பாய்ந்த வேகத்திற்கு
ஈடுகொடுக்க இயலுமாவென்னும் எனது சிந்தையை
தூரமிருக்கச் சொல்லி
எனைக் காத்திருந்தன எனதெழுத்துக் குடைகள்..!

வாழி



கனவினில் கண்ட பூமுகம் நாண
கண்ணிமை தன்னில் என்னிலை காண
மனதினில் அன்பின் நாட்டிய மாட,
மங்கையுன் நாளில் பாடினேன் வாழி!

தோகையி லாடும் பூச்சர முந்தன்
தோள்களி லேறி யென்கரம் பட்டு
வாகையென் றெந்தன் தோள்களில் தாவி,
வாழ்ந்திட காதல் சொன்னவள் வாழி!

நாளொறு நாணம் நங்கையுன் வண்ணம்
நாவினில் மௌனத் தென்றலே கொஞ்சும்,
மாசறு பொய்கை கொண்டவள் நெஞ்சம்
மன்னவர் போற்ற மலர்ந்திட வாழி!

பயிற்சியாளர்


                சுப்ரமணியன் அந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 85 கிலோ பிரிவில் பளு தூக்கும் போட்டியில் இறுதிச் சுற்றில் இருந்தார். ஒரு சைனா போட்டியாளருக்கும், சுப்ரமணியனுக்குமிடையே கடும்போட்டி நிலவியது. யார் வெற்றி பெறப் போகிறார்களென உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.
பயிற்சியாளர் விஜயன் சுப்ரமணியனை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தார். சைனா வீரர் 165 கிலோ தூக்கி விட்டார். சுப்ரமணியன் இருமுறை 165 கிலோவை தூக்க முயற்சித்து தோற்றார். கடைசி முயற்சி. சுப்ரமணியன் மனம் கலங்கி இருந்தது. தன்னால் முடியாமல் போகுமோ என மனம் தடுமாற தொடங்கி இருந்தது.

               சைனா வீரர் 170 கிலோ முயற்சித்து தோற்றார். சுப்ரமணியனிடம் அவரது பயிற்சியாளர், உத்வேகமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தார். இது உச்சத்தை நோக்கி உனது இறுதிப் பயணம், இம்முயற்சி உன் எஞ்சியுள்ள வாழ் நாட்களைத் தீர்மானிக்குமென சொல்லிக் கொண்டிருந்தார்.

               சுப்ரமணியன் கண்முன் அவரது தந்தையும், தாயும் தோன்றினர். அவர்கள் அன்பு தோன்றியது. நாட்டு மக்கள் வைத்திருந்த அன்பும், நம்பிகையும் தோன்றியது. பயிற்சியாளர் விஜயனை நோக்கினார். கடந்த 3 வருடங்களாக அவரது பயிற்சியாளர் விஜயனின் உழைப்புத் தோன்றியது. ஆவேசமாக எழுந்தார். சுப்ரமணியனது ஆவேச எழுச்சியைக் கண்டார் பயிற்சியாளர். முன்பு ஓடிச்சென்று அவரது தூக்க வேண்டிய எடையை சரி பார்த்தார். சுப்ரமனியனை தட்டிக் கொடுத்து வென்று வா எனக் கூறினார்.

               சுப்ரமணியன் களத்தில் இறங்கினார். கண்மூடி உள்ளத்திலுள்ள அவரது அன்புப் பெற்றோரை ஒரு கணம் தியானித்தார். ஆவேசமாக எடையை ஓரே முயற்சியில், ஆஹா, அற்புதம், அபாரம், தூக்கி விட்டாஆஆஆஆஆஆர். எடையை கீழே பொட்டுவிட்டு திரும்பி எடை அளவைக் காட்டும் கருவியை பார்த்தார், என்ன ஆச்சரியம்? அங்கே 170 கிலோ என மின்னிக் கொண்டிருந்தது.

ஆம், சுப்ரமணியன் 165 கிலோவைத் தூக்க சிரமப் பட்டார். எப்போது அது 170 கிலோவாக மாறியது? பயிற்சியாளர் சுப்ரமணியனது ஆவேசத்தைப் பார்த்து எடையை 170 கிலோவுக்கு மாற்றி விட்டார். 

                பயிற்சியாளருக்குத் தெரியுமல்லவா? தனது மாணாக்கன் எப்போது உத்வேகம் பெறுவானென்று! உலகில் முதலிடம் பெறுவானென்று!

மலர்வாயா?

























பூஞ்சிறகாய் நீயென்னுள்
புதுக்கவிதை படிக்கின்றாய்
தேன்மெழுகாய் நானுன்னால்
மனமுருகி வாழ்கின்றேன்

கனல்காற்றாய் நீயென்னை
தகித்தபடி போகின்றாய்
கார்முகிலாய் நானுன்னை
நினைந்தபடி சுழல்கின்றேன்

சுடுதீயாய் நீயென்னை
சுட்டெரிக்கப் பார்க்கின்றாய்
செந்தமிழால் நானுன்னை
சேர்த்தணைத்து வியக்கின்றேன்

விடுகதையாய் நீயெந்தன்
விடைமறைத்து மீள்கின்றாய்
வேதனையின் சுமை நீங்க
உனை நாடி நிற்கின்றேன்

சில நேர பிழை பொறுத்து
சிந்தனையில் குளிரிருத்தி
எனை மீட்க வருவாயா?
இதழ் பூத்து மலர்வாயா?

நிகழ்கால ஏடு




நொடிகளாய் மாறி
நம்மைக் கடந்து போன
இனிமைக் காலங்களின்
பதிவுகளைத் தேடி
நிகழ்கால ஏடுகளை
புரட்டியபடியே இருக்கின்றேன்