Thursday, 24 July 2014

தீ பிடிக்கும்
















எனக்குத் தீந்தமிழ் பிடிக்கும்
தேமதுர இசை பிடிக்கும்
நல்லோவியம் பிடிக்கும்
நளினங்கொண்ட நடை பிடிக்கும
நற்கதை பிடிக்கும்
நடிப்புலகம் பெருமைகொள்ளும் யாவரும் பிடிக்கும்

கொட்டும் மழையில்
குடையின்றி நடத்தல் பிடிக்கும்
என் கோப முடிச்சுகளை
நீ இதழ் கொண்டு அவிழ்ப்பது பிடிக்கும்
கற்பனையுலகில் உனது தடங்கண்டு
களிநடனமாடப் பிடிக்கும்

விழிமுனையில் எட்டி நிற்கும் துளி கொணருமுன்
கார சமையல் பிடிக்கும்
என்றும் எளிதாய் ஜீரணமாகும்
என் இட்டலியே உனை மிகவும் பிடிக்கும்
அடர்குளிரின் நடுவே
அகமுசுப்பும் சுவை கொண்ட தேநீர் பிடிக்கும்

தெளிந்த நீரோடை
வளைந்து செல்லும் மலைச் சாலை
எங்கும் பசுமையுடன்
எனை கொஞ்சும் காற்று
கார்மேக வானம்
கவி சூல் கொள்ளும் தனிமை
எல்லாம் பிடிக்கும்

அத்தனையும் நான் ரசிக்க
எனை ரசிகனாக்கிய உனை
எனது உயிரெனப் பிடிக்கும்

ஆனால்,
உனக்குப் பிடித்தமானவற்றில்
எனைவிட மேலாயொருவனை நீ சந்திக்க நேர்கையில்
அந்த நொடியே என் ஆதி முதல் அந்தம் வரை
பொறாமையெனும் தீ பிடிக்கும்!

பயணம்

உயிர் பிறப்பின் சாரெடுத்து
உற்சாக விளிம்பு தொட்டு
ஒவ்வொரு நாள் விடியலிலும்
உருவாகும் புது வசந்தம்.

சுழல் காற்று சுவையூட்ட
செங்கதிரோன் அனல் கூட்ட
அழல் கொண்ட கழல் பூட்டி
அக்கணமே வான் தொடுவேன்.

இடைத் திமிரும் தடையெல்லாம்
இமை களையும் ஓர் இறகாம்.
எட்டிக் கரம் பற்றி உயர்
எல்லைக்காய் என் பயணம்!

சிலந்தி வலை















தனிமைச்சுவற்றில் மனச்சிலந்தியின் வலையில்
வண்ணத்துப்பூச்சியின் நட்பை பற்றிய
எனது கவிதை சிக்கியிருந்தது.

அலமாரிகளை துடைத்து 
ஆன்மாக்களுக்கு வெளிச்சம் கொடுக்கவந்த
அஹிம்சாவாதிகளின் கரங்கள்
அழுந்தத் துடைத்ததில்
சிலந்தியின் வலையுடன்
எனது கவிதையின் முனைகளும் உடைந்தன.

உணர்வுகளில் உருவான கவிதையாதலால்
மீண்டும் எழுத முயற்சியெடுக்காமல்
முனை மழுங்கிய கவிதை வரிகளின்
எழுத்துக்களை கூட்டிக்கொண்டிருக்கிறேன்,

Wednesday, 23 July 2014

புத்தொளி


இதழ்களும் சுடும் இதய ஜ்வாலை கொண்டெனைத் தீண்டினும்
இமை வழி கொடிய அம்பினைக் கொண்டெனைச் சாய்ப்பினும்
வதம் செயும் மனம் பெற்றவளாய் உயிர் பருகினும்
வலிதரும் வாழ்க்கையில் எனைக் கொண்டுச் சேர்ப்பினும்
மனையென கடிமணம் புரிந்து எனில் வரிந்திட
மகிழ்ச்சியில் மனவெளியெலாம் புத்தொளி பரவுதே!

ஒற்றை ரோஜா















புறப்பட்ட இடத்திலேயே மனக்கால்கள்
ஓடிக்களைத்து வந்து நின்றன.
மௌன இறைச்சலின் புழுதியங்கும்
வியாபித்திருந்தது.
சுற்றும் முகவரியற்ற மதில்கள்
பாதைகளை மறைத்திருந்தன.
வெறுப்பின் அயற்சியில் கால்கள்
சோர்வுற்றிருந்தன.
இளைப்பாற ஒரு பூவின் நிழல்தேடி
தளர் நடையிட்டன.
இருண்ட வானமும்
வறண்ட பூமியும் கொண்டு
பூக்களோ புறம் போயிருந்தன.
வரும்வரை வேறுவழியின்றி
முட்புதரின் நிழலில்
மூச்சிறைக்க நின்றன.
சட்டென நாசியைத் தொட்ட
மெல்லிய மலர்வாசம் பூத்த
ஒற்றை ரோஜாவின்
ஒய்யார வருகையுடன்
சடசடவென பொழிந்த வானத்து மழை நீரும்
புத்துணர்வை அள்ளி வீச
புதுத் தெம்புடன் கால்கள்
துள்ளிக் குதித்தன,
தனது ரோஜாவைச் சூடியபடி
மகிழ்ச்சிச் சிறகைப் பொருத்திக்கொண்டு
வானப்பாதையில் வட்டமடித்து
விரையத் தொடங்கின!

Tuesday, 22 July 2014

கனம்


















அவ்வெழுத்துக்களின் கனம் கூடுதலாயிருந்ததில்
ஒவ்வாத மையின்  நீர்த்த தன்மையால்
அழுத்தம் தாளாமல்
பேனாவின் முனை விரிந்து மலர்ந்திருந்தது

எண்ணத்திற்கும் எழுத்திற்குமான விகிதாச்சாரம்
குறையக் குறைய
ஆவேசத்தின் அந்நொடியில்
முனை ஒடிந்த பேனாவுடனான
போராட்டம் தொடங்கிற்று

சில இடங்களில் பொத்தல்களும்
தடம் மாறிய கோடுகளும்
கோணம் மாறிய எழுத்துக்களுமாய்
பிரசவித்த கவிதையாயினும்
வலி(மை) மிகுந்த எழுத்துக்களாதலால்
சுவைமட்டும் குன்றாமலே இருந்தது

அம்மாவின் குரல்


ஈரம் சூடிய இரவொன்றில்
தென்னைமரங்கள் 
வெட்கப்புன்னகை பூத்திருந்தன.
ஒளிமழையில் நனைந்தவெந்தோட்டத்தில்
கூச்சலிட்ட பறவைகளுடன்
என்மனமும் கும்மாளமிட்டது.

கரம்பற்றி தோள் சாய்ந்த 
வான்தேவதை கண்களிலே
ஆயிரம் நிலவு தோழமை கொண்டிருந்தது.

காதலருக்கு இரவின் கவிதைகளில்
ஈர்ப்பு அதிகமென நிதர்சனமானது.

எழுதாத எண்ணற்ற கவிதைகளை
உள்ளடக்கிய அவளையும்,
எண்ணத்தில் கவிதைக்குடையை
விரித்துவைத்த இயற்கையையும்
ஒப்பிட முயன்று
அயர்ந்துதான் போனேன்.

இப்பொழுது எப்பொழுதும்
தொடர வேண்டுமென பேராசையில்
என்னவளின் குளிர்போக்க
இறுகணைத்தபடி
அங்கேயே நின்றிருந்தேன்,
அம்மாவின் குரலெந்தன்
ஆழ்ந்த உறக்கம் கலைக்கும்வரை..!