Monday, 27 January 2014

வாசிக்கப்படாத கவிதை






















புத்தக அடுக்குகளின் பின்புறம் மறைந்திருந்து அந்த சோகக் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.
அங்கங்கே தென்பட்ட அவல ஓசை சிந்திய கண்ணீரால் அழிந்திருந்தன.
உடை விலகிய வார்த்தைகள் கோர்வையின்றி விலகியிருந்தன.
அங்கங்கே தழும்புகளும் அதன் ரத்த வாடையும் நாசியை நெருடியது.
வெளிச்சத்தில் மங்கலாகவும் இரவுகளின் மங்கிய ஒளியில் பிரகாசமாயுமிருந்தன.
உள்ளுணர்வுகளை உணராமல் இச்சைக்கு வாசிப்பவருக்கு அவ்வெழுத்துக்கள் அழகுதான்.
உள்ளூர தெளிவில்லா நீரோட்டமாய் கவலைகளும், சிதைந்துபோன கற்பனைகளும் இறைந்து கிடந்தன.
ஏளனமாய் தோன்றுமவ் வெழுத்துக்கள் எழுத்துப்பிழை கவிதையாய் தோன்றலாம்.
என்றேனும் ஒருவரால் உணர்வுகளை வாசித்து உச்சுக் கொட்ட வைக்கலாம்.
இவையெல்லாம் எழுதியவளின் வாழ்வை உயர்த்தவோ, சிதைத்தவரின் வாழ்வை தண்டிக்கவோ இயலாது.
எனினும், எங்கேனும் ஒரு மாற்றத்திற்கு தொடக்கப்புள்ளியை வைக்கலாம்!

அதிசயமன்றோ!



















அதிசயமன்றோ!
நான் பதியம் வைத்த
ரோஜாச் செடியின் பூக்களெல்லாம்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வேளையும்,
ஒவ்வொரு வண்ணத்தில் பூக்கிறது!
அதிகாலையில்
கண்குளிரும் வெண்மையாய்,
இடைப்பொழுதுகளில்
எனை கவனமாய் பொத்தி பாதுகாக்கும்
செந்நிற கோபக் கொழுந்தாய்,
மாலையில்
மயக்கும்,
மந்தகாச பொன்மஞ்சள் வண்ணமாய்..,
இரவிலே
எனை அள்ளி அணைக்கவந்த
பச்சையும், நீலமுமாய்..,
என் காதல் ரோஜாசெடியில்தான்
எத்தனை வண்ணங்கள்..!

நிலவில்லா ஆகாயம்

இதய கூடாரத்தின்
கனவு களஞ்சியத்தில்
நினைவுச் சிதறல்களை
மாலையாக்கி
பாதுகாத்திருந்தேன்.

இரவுகளின்
தனிமை பொழுதுகளில்
என் பிம்பத்திற்கு அணிவித்து
அழகு பார்த்திருந்தேன்.

பளீரிட்ட
வெளிச்ச வர்ணப் பகல்களில்
மாலையின் மகத்துவம்
மங்கியதாய் நீ நினைத்தது
என் பிழையில்லை.

ஒளி மழையாயினும்
இருள் தடம் ஆயினும்
என் துணை
இம்மாலையனக் கொண்டேன்.

காலை, மாலை, இரவென
கவிதை பொழுதுகளிலெல்லாம்
நினைவுப்பூமாலை துணையிருக்க,
நிலவில்லா ஆகாயமாய்
காகிதப்பூ வாழ்வில்
வசந்தம் தேடியபடி நான்...!

மேகத்தைத் தேடி













நீள்வானப் பாதையின்
நெடுந்தொலைவுப் பயணத்தில்
நீந்திய. மேகத்தின்
நிழலை தொடர்ந்த பறவை
இடைவெளியின்றி
இணைந்து பறக்கும் ஆவலுடன்
மேலே மேலே எழும்பியது.

வாழ்வு தந்த வள்ளலை
விட்டு விலகி
கனவுடன் காதல் கொண்டு
காற்றினை கிழித்து மேலும் பறந்தது.

விரைந்த வேகத்தில்
சிதைந்த காற்று
உந்தியதால்
உருக்குலைந்த மேகம்
துளிகளாய் மாறி
தாயுடன் கலந்து மறைந்தது.

தன்மேல் விழுந்த
துளிகளின் சிலிர்ப்பில்
தன்னை மறந்த பறவை
மேலும் மேகத்தைத் தேடியபடி
மேலே மேலே பறந்துகொண்டே இருந்தது...!

ஆபித் சுர்தி

ஒரு சிறு பொறி இவ்வுலகையே மாற்றவல்லது என்பதற்கு இவ்வுண்மை கதை நல்ல உதாரணம்

ஆபித் சுர்தி, ஒரு வித்தியாசமான மனிதர். 1935, மே 5 ஆம் நாள் பிறந்த குஜராத்தியான இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், ஓவியர். இவர் 1993ல் எழுதிய ஒரு புத்தகத்திற்காக தேசிய விருது வழங்கப் பட்டது.
எனினும் உலக அளவில் இவர் புகழப்பட காரணம், இவரது ஒரு சிறு முயற்சிதான். அதற்குக் காரணமாய் அமைந்தது அப்போது ஐ நாவின் தலைவராக இருந்த புட்ரொஸ் புட்ரோஸ் காலியின் கருத்தை இவர் படிக்க நேர்ந்ததுதான். 2025ல் உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அதீத தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுமென சொல்லி இருந்தார். ஆபித் சுர்திக்கு தனது பால்ய நினைவுகளும், தண்ணீருக்கு அப்போது அவர்கள் பட்ட பாடும் நினைவில் வந்து முட்டின.
அதே சமயம் ஒரு நண்பர் வீட்டில், அவர் குளியலறையில் ஒழுகும் குழாயைக் கண்டு, அதை சரி செய்யக்கூடாதாவென கேட்ட போது, நண்பரின் பதில் ஆபித் சுர்தியை சிந்திக்க வைத்தது.
நண்பர் சொன்னார், “ஒரு குழாய் சரிசெய்யும் ஆளை கொண்டு இந்த சாதாரண ஒழுகலை சரி செய்ய இயலாது, அது விலை மிகுந்த செயலாகும், மேலும் இந்த செயலுக்காக குழாய் சரி செய்யும் ஆள் வரமாட்டான்” என்று.
ஒரு வி நாடிக்கு ஒரு சொட்டாக வடியும் நீரால் நாம் ஒரு மாதத்தில் 1000 லிட்டர் நீரை இழக்கிறோமென எங்கோ படித்தது அவர் மனதில் நிழலாடியது.
அவர் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு குழாய் சரி செய்யும் ஆளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறுகளிலும் ஒவ்வொரு அடுக்குமாடியாக சென்று, ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி, குழாய் ஏதும் ஒழுகுகிறதா? ரப்பர் இணைதடுப்பான் (ரப்பர் ஒ ரிங்க்) ஏதும் மாற்ற வேண்டியுள்ளதாவென சோதித்து சரி செய்து கொடுக்க எண்ணினார். பணம் தேவை பட்டது.
நல்லெண்ணம் இருந்தால் எல்லாம் கூடிவருமென சொல்வதற்கு ஏற்ப, அந்த சமயத்தில் ஹிந்தி எழுத்துக்கு அவருக்கு எதிர்பாராதவிதமாக 1 லட்சம் ரூபாய் பரிசு பணம் வழங்கப்பட்டது.
உடனே செயல்பட்டார். ஒரு குழாய் சரி செய்யும் ஆளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு குடியிருப்பை அணுகி குழாய்களை சரி செய்து கொடுக்கத் தொடங்கினார். ஆம், இலவசமாகத்தான்.
அவரது ஒரு மனித அமைப்பிற்கு Drop Dead என பெயரிட்டு Save every drop or Drop Dead என வாசகத்தை தனது அமைப்பிற்குப் பொருத்தினார்.
முதல் வருட முடிவில் அவர் 1533 இல்லங்களில் கதவுகளை (மனக்கதவுகளையும்தான்) தட்டியிருந்தார். 400 குழாய்களுக்கும் மேல் சரி செய்திருந்தார்.
சிறிது சிறிதாக செய்தித்தாள்களிலும், மீடியாவிலும் அவர் புகழ் பரவத் தொடங்கியது. 2010ல் CNN IBN BJ வின் Be the change (மாற்றமாயிரு) எனும் விருது வழங்கப்பட்டது. அதே வருடம் பெர்லினிலிருந்து வந்த ஒரு தொலைகாட்சி குழு அவரை காலை முதல் மாலை வரை ஒரு ஞாயிறில் தொடர்ந்து ஒளிபரப்பியது.
2013ல் அவர் வசித்த பகுதியில் 40 வருடங்களில் மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடு வருமென அறிவிக்கப்பட்டு, அந்த மா நில அமைச்சர்கள் ஒன்று கூடி, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முனைந்து கொண்டிருந்தபோது, இந்த சாதாரண மனிதர், தனது சுய நலமற்ற தொண்டால், சிறு முயற்சியால் எவ்வளவு தண்ணீரை சேமித்திருப்பார் என சொல்லவேண்டுமா?
வாழ்க ஆபித் சுர்தி, அவரைப்போல் நாமும் ஏதேனும் செய்து ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டுவர முயல்வோமா

தொடர்கின்றேன்!



முடிவுக்குள் தொடக்கம் நான் தேடேனோ??
முகமின்றி முகமூடி தரித்தேனோ?
விடிவென்று காண்பதும் நிஜம்தானோ?
விடையில்லா வினாவில்தான் மறைவேனோ?

மறையாத நிலைகொண்ட பூவுண்டோ?
மலர் பெற்ற வாசத்தில் பதிலுண்டோ?
விளக்கங்கள் தேடுமென் மனங்கண்டு
விலகாத நேசங்கள் துணையுண்டோ?

துணை நிற்கும் கரம் பற்றி தோள்சேர்த்து
தொலைதூர பாதையென் வசமென்று
பிணையத்தின் நிலைகொண்ட வாழ்விங்கு
பிடித்தேனோ அல்லேனோ தொடர்கின்றேன்!

விழியசைவில்

உலர்ந்த செடியின் வாசம்
உள்ளிருப்பு போராட்டமாய்
நாசித் துளைகளை
குமுறச் செய்தது.

உருட்டிய சோழிகளில்
ஒன்று சிதறி
கணக்கை தவற செய்தது.

காலைப் பொழுதினில்
சுடுங்கதிரவனின் கதிர்
மனத் தளர்வை தந்தது.

தளும்பிய நீர்குடம்
சுமந்த தேவதையின்
இடைவாசம் இழந்தது.

இருந்தும் என் மனம்
உன் விழியசைவில்
வான்வெளியின்
சங்கீதத்தில் இணைந்தது..