Saturday, 11 January 2014

முட்டாளில்லை

                அந்த காரை நான் மலைப்பாதையில் வேகம் குறைத்துத்தான் செலுத்தி கொண்டிருந்தேன். வளைந்து வளைந்து மேலேறிக் கொண்டிருந்த சாலையில் நான் மட்டும் தனித்து உதட்டில் பிடித்த பாடலை ஹம்மிங்க் செய்தபடி போய்க்கொண்டிருந்தேன்.
                திடீரென்று கார் நிலை தடுமாறவே ஓரமாய் நிறுத்தி இறங்கி பார்த்தால் பின் சக்கரத்தில் ஒன்றில் காற்று இறங்கிபோய் இருந்த்து. கார் டிக்கியில் இருந்து ஸ்டெப்னி டயரை எடுத்து மாற்ற தீர்மானித்து, கைசட்டையை மடக்கிவிட்டபடி டிக்கியை திறந்தேன்.
                யாரேனும் உதவிக்கு கிடைப்பார்களா என சுற்றுமுற்றும் பார்த்தால் சிறிது தொலைவில் ஒரு பலகையில் “அன்னை தெரசா மன நோயாளிகள் காப்பகம்” எனும் எழுத்துக்களை கண்டேன். வேறு எங்கணும் யாரையுமே உதவிக்கு அழைக்க முடியாத சூழலென உணர்ந்து, ஸ்டெப்னி டயரை இறக்கி வைத்துவிட்டு காரின் சக்கரத்தின் போல்ட்டுகளை கழட்ட ஆரம்பித்தேன்.
                டயரை கழட்டி ஓரமாய் வைத்துவிட்டு கழட்டிய 4 போல்ட்டுகளை ஓரமாய் வைத்து விட்டு ஸ்டெப்னியை மாட்ட ஆரம்பித்தேன். எங்கிருந்தோ ஓடிவந்த குரங்கொன்று அந்த நான்கு போல்டுகளை அள்ளிக்கொண்டு ஓடி மலையில் மறைந்துவிட்ட்து.
                திடீரென நிகழ்ந்த நிகழ்வால் அதிர்ச்சியிலாகி செய்வதறியாது திகைத்து, வேறு போல்ட் வாங்க எங்கு செல்லவேண்டும்? அதுவரை இங்கு காரில் யாரை பாதுகாப்பாக வைப்பது என பல்வேறு கேள்விகள் மனதினுள் கேட்டபடி இருந்தேன்.
                அப்போது அந்த வழியில் நடந்து வந்த ஒருவர் என்னிடத்தில் என்னவென கேட்டார். நான் எனது சூழ் நிலையை சொன்னபோது, மற்ற மூன்று சக்கரங்களில் இருந்தும் ஒவ்வொரு போல்ட்டை கழட்டி ஸ்டெப்னி டயருக்கு மாட்டி அடுத்து உள்ள பழுது நீக்கும் இடத்திற்கு காரை ஓட்டி சென்று சரி செய்துகொள் எனக் கூறினார்.

                நான் அவரை வியந்தபடி, “நீங்கள் அருமையான வழி கூறினீர்கள், எவ்வாறு இப்படி சிந்தித்தீர்கள்?” என கேட்டபோது அவர் சொன்னார், “நான் பைத்தியம்தான், ஆனால் நான் முட்டாளில்லை”

பலகை

நமதெழுத்துப் பலகையில்
சிதறிய வண்ணங்களை
குழைத்து மெழுகிட
சிறந்ததோர் ஓவியம்
விழித்திடலாக,
கண்டவர் மெச்சினர்,
கரியதோர் பலகையில்
புதிய வண்ணக் கலவையை..

மகிழ்கிறாய் நீயதன்
கருப்பொருளென்று,
மருள்கிறாய் பிறரதை
அறியிலையென்று,
சிரிக்கிறாய் பலகை மேல்
உயர்வதைக் கண்டு,
சினக்கிறாய் உனக்கதில்
இடமிலையென்று.

நீயிலா பலகையில்
நிஜமில்லையடி,
நீண்டுவா, எனை மீண்டும்
தீண்டு வா!
சுழண்டு சிதறும் கலவையில் புது
சரித்திரங்கள் உயிர்பெறட்டும்!

குரு
























மூச்சுக்காற்றுக்குள் நீ சொன்ன
முன்னூறு கதைகளும் முண்டியடிக்க,
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு திருப்பத்திலும்
உன்கரம் பற்றியே நடப்பதாய்
உணர்வுகள் பொங்குதடா! 

எத்தனைத் துயரங்கள்,
எத்தனை வசவுகள்?
என்றினும் நீ மனம்
கலங்குதல் கண்டேனா?
கோடி உயிர்களும்
குமுறும் எரிமலையும்
கொண்ட ஆழ்கடல்
அமைதியின் உருவமாய்,
வானத்திற்கிணையாய்
விரிந்து கிடப்பதாய்
எந்தன் மனமெங்கும்
வியாபித்திருக்கிறாய்!

முயற்சிகள் தோற்குமோ,
முரண்களே சுவைக்குமோ?
தினமொரு உளியெனை
சிதைக்கலாகுமோ?
வரமென நீ குரு
வருவதாய் உணர்கிறேன்,
கரம்பிடித்தேயெனை
கரைத் தொட முயல்கிறேன்.!

காதல்தூய்மை




பசுவின் வயிற்றில்
கரந்த பாலின் காதல்தூய்மையை
நீர்த்துப்போகச் செய்கிறாளவள்,
நிறுத்தாமல் நீரூற்றி..!
நீருண்ட பால்
திரிவதில்லை,
பிரிவதுமில்லையாம்!

தாயம்
















ஒன்பதுவேண்டி 
உருட்டிய தாயத்தில்
விழுந்தது ஒன்றுமில்லை…,
உனக்கது பனிரெண்டாயிருக்கலாம்,

மனதை அழுத்தும் பாம்புக்கடிகளும்,
பொதியாய் சுமக்கும் பொய் மூட்டைகளும் கொண்ட
சரசரவென இறங்கும்
உச்ச ஸ்தானங்கள் அடைய
விழுந்தது பனிரெண்டானாலும்,
எனக்கது ஒன்றுமில்லைதானே!

தேநீர்

















அதிகாலை பனிக்காற்றில்
எழும்ப மனமின்றி
சுருண்டு கிடந்தவனை,
துயிலெழுப்ப அருகமர்ந்து,
தோள்தொட்டு அழைக்க,
விழியிமை திறந்து
விடியலாயவள் முகங்கண்டேன்.

அன்றலர்ந்த செந்தாமரையாய்,
அகமும், முகமும் மலர்ந்து,
இருவிழியில் தண்ணிலவையேந்தி,
இதழ்களிலே புன்முறுவல் சூடி,
உருகிய தேன்பாகாய் உச்சரித்தாள்,
“அன்பே, இன்று உன் தினம்,
மணக்கச்செய்,
பிறர் மனம் இனிக்கச்செய்”

எழும்பியவன் கரங்களிலே
எடுத்துத் தந்தாள் ஒரு கோப்பை.
இதழ் பொருத்தி சுவைத்தேன்.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா!!!!!!!!!!!
எப்படியடி இவ்வளவு மதுரம்?
இனிப்பில்லா தேநீரே
நான் கொடுத்தேனென
முருவலித்தாள்!

பிறகெப்படி?
தேநீரை தயாரிக்கையில்
உன் விரல் நுனியேதும்
தேநீரைத் தொட்டிருக்குமோ?”

அவளின் வலி














ஓரமாய் நின்று
ஊளையிட்டு அழும்
நாயறியறியுமோ அவளின் வலி?

அக்கினி முன் கைபிடித்து
வாழ்வினில் நுழைந்தவனின்
அன்பை கொண்டுபோன
அகால மரணத்தின்
உயிரருக்கும் வலி,

உடலுடன் மட்டுமல்ல,
உயிருடனும் கலந்தவன்,
நிதானித்த பொழுதுகளில்
அன்புச்சோறிட்டு
அருசுவையாய் பரிமாறி,
இறக்கையற்ற பட்டாம்பூச்சியாய்
உள்ளம் முழுதும் பறந்தவன்.
மூச்சின்றி கிடந்த பொழுதின்
உளம் நொறுக்கும் வலி!

விஷமென்று அறிந்தும்
வேளைதவறாமல் பருகி,
சிறிதுசிறிதாய் உயிர் துறந்து,
அவளையும் துறந்து
வானுலகம் புக்கான்
வழிகண்டு கொண்டவனின்
வழித்துணையாய் வந்தவளின்
விழிகளில் வெள்ளப்பெருக்கின்
ஓசையெழுப்பும் வலி!

நம் தேசமெங்கும்
இதுபோன்று
வாழ்விலே கனல் சுமந்து,
விழிகளிலே நீர் பெருக,
துடித்து சிதறும் சிதிலங்களின்
காண மனமருக்கும் அவலங்கள் எழுப்பும்,
சமுதாய சீர்கேட்டின்
நாணித் தரை சிதறும்
வெட்கக் கேட்டின் விசும்பல் ஒலி!