Friday, 23 August 2013

வதம்













முத்துக்கள் பதித்த
சுவைமது ஊற்றினால்
எனை வதம் செய்கிறாள்,

இறுதியில் தோற்கிறாள்.

Thursday, 22 August 2013

மலைப் பயணம்















நெடிய மலைப்பாதையில்
நெஞ்சு நிமிர்த்தி
நடக்கத் தொடங்கிய
அதிகாலைப் பொழுது.

தொடக்கம் எளிதாய்,
இடைப் பற்றிய பையில்
கனமாய் ஏதேதோ!

அரைக்கால் சராயும்,
டீ ஷர்ட்டும்,
கச்சிதமான காலணியும்
நடை பயணத்திற்கு ஒத்ததாய்...

வேக நடையல்ல..
விவேக நடையுடன்,
தனிமையாய்,
இனிமையாய்
ஒரு பயணம்.

தினமென் நாட்களில்
போட்டிகள் கண்டு,
போட்டியில்லா பயணம்
புதுமையாகவே...

மரங்களும்,
கனிகளும்,
குயில்களும்,
குரங்குகளும்
மந்தகாசமாய்
மனதிற்கு இனிமையாய்,

குதூகலத்திற்கு குறைவில்லை,
கூச்சலிடத் தடையில்லை,
பாடிடவும், ஆடிடவும்
பயமென்று எதுவுமில்லை.

கையிலிருந்த
பழம் பிடுங்கி
கடித்து விட்டு ஓடியது
ஒரு குரங்கு.

இடையிடையே
சில பாம்புகள்..
அவை கண்டு நான் ஒதுங்க,
எனை கண்டு அவை பதுங்க..
யாருக்கு யார் மேல் பயம்?

நெடு நேரம் நடந்து
பின் இருந்தேன் இளைப்பாற,
பயணம் மட்டும்
சுகமில்லை,
பயணித்த வழியைத்
திரும்பிப் பார்த்தலும் தான்...

எத்தனை ஏற்றம்,
எத்தனை இறக்கம்,
வாழ்க்கையைப் போல...
எளிதாக எதுவுமில்லை..
என்றாலும் சுகமே!

பூக்களின் வாசனை,
பனித்துளி காற்று,
மூச்சினில் சுகந்தம்,
முயன்றதே ஆனந்தம்..

மரங்களும்,
மிருகங்களும்,
மலைகளும்,
மிக இனிமையானவை...
மனிதர்களும்

அப்படியே இருந்தால்.......?

கவளம்


அன்புசேர் நெஞ்சம் கொண்ட அனங்கவள்,
பண்புடன் பாசம் குழைத்த பாங்கினள்,
பெண்களே வியக்கும் வண்ண பொன்மகள்,
என்னிலே உயர்ந்து நிற்கும் என்னவள்.

கார்குழல் கொண்ட முல்லை பூமணம்
காதலின் வாசம் பெற்று வீசிடும்.
சூரியன் நேசம் கொண்டு மேனியில்
சந்தனம் தொட்டு வண்ணம் பூசுவான்.

முற்றத்து மையம் வைத்த பானையில்
மாசறு கரங்கள் செய்த பொங்கலை
பெற்றிட துள்ளும் எந்தன் கைகளை

பற்றியே வாயில் கவளம் ஊட்டுவாள்!

பச்சை மிளகாய்





















கவிதைக்கரு தேடி
கவலையுட னிருந்தேன்.
கடுகி அருகில் வந்தாள்.
கையிலே இரண்டு
பச்சை மிளகாய் தந்தாள்.
கடியடா,
இன்றேல்
இதைப் படியடா
கவிதைக் கரு
கிடைக்கு மென்றாள்.
கண்ட கழிசடை
எம்மினத்தை
கடிந்து பேசியதை எழுத
கவிதையால் இயலாதடி.
பைந்தமிழில்
அதற்கு வழியேதடி?
வேற்று மொழி
கற்று வந்து

வீசுகிறேன் வார்த்தைகளை...

விழாக் கொள்















நேற்று அவள் மொழி சுரத்தாயில்லை,
நினைவில் வெற்றிடம் அதுவே தொல்லை.
காற்று, புல்வெளி, கோழி, வான்மழை
கவிதைத் தோழராய்க் கொண்ட என் முல்லை.

மனதின் கவலைகள் மடிப்பையில் சேர்த்து
மணக்கும் நெல்மணி முத்துக்கள் கோர்த்து
தினமும் பல கதை பேசிடச் செல்வாள்
திகைக்காது கோழி தினமதை கேட்கும்.

பலமொழி கற்றதன் பயனெது மில்லை
பாவையின் மனமொழிக் கேங்கிடும் என்னை
துளையிலா குழல் வழி ஒழுகிடம் காற்றிழைத்
துயரொலி கொண்டெனை தவிர்ப்பதே வேலை.

கண்மணி உன் துயர் களைந்திட வழி சொல்,
காதலன் என்விழி கலந்திடும் மனம் கொள்,
விண்மணி நிலவொளி வழிகையில் கரம் சேர்
விடிந்திடும் பொழுதுகள் நமக்கடி விழாக் கொள்!

இறுதி வரை



விட்டு விடவோ?

விழும் இடம்
தெப்பக் குளமோ?
பற்றி எழும்பவோ?
பயணம் 
முற்றுப் புள்ளியோ?
இணைக்கர மில்லாத்
தனிப் பயணமா தலால்
இயன்ற வரை அல்ல,
இறுதி வரை
போராட்டம்தான்...!

ஓர விழிப் பார்வை






உன் ஒரு நொடி
ஓர விழிப் பார்வை வழி
ஒரு கோடி மலரம்புகள்
எனை தைக்குதே!