Saturday, 22 June 2013

கரம் பிடிக்க




அழகிய பின்மாலைப் பொழுது,
சில்லென்றக் காற்று,
அமைதியான சாலை,
அழகான அவள்,
அன்பான நான்,
கதைபேசி நடை பயின்றோம்,
கவி பாடி கலகலத்தோம்,
நான்கு வருட காதலிலே
என் விரல் கூட பட்டதில்லை.
உணர்வுகள் தாம்
ஒன்றாயின,
எம் உருவங்கள் அல்ல.
மரங்களிலே நீர் பூக்கள்,
மனங்களிலே சிரிப்பூக்கள்,
மெலிதாய் அவள் விரலென் விரலை
தொட்டது போல் உணர்வு.
இல்லையில்லை,
என் ஆழ்மனதின் ஆசையது.
சிறு குழந்தை
பள்ளிக் கதையை சொல்வது போல
உற்சாகமாய் பேசி வருகிறாள்.
அட ஆமாம்,
அவளறியாமல்
அவள் விரல்கள்
என் விரலைத் தொடுகின்றனவோ?
அவளறிந்தா?
அறியாமலா?
ஆசை என் மூச்சடைக்க
அவள் கரம் பற்றிட
ஆவல் கொண்டேன்.
ரோஜாவின் இதழ் போன்ற
அவள் விரல் நுனி தொடுகையில்
உள்ளத்தில் பனிமலை
பொங்கி வழிந்தது.
பற்றவா?
வேண்டாமா?
கயவா எனக் கூறுவாளோ?
கண்ணியம் காத்திட வேண்டாமோ?
அடுத்த தெரு வளைவில்
திரும்புகையில்
மென் கரம்
மீண்டும் பட
என்னையறியாமல்
அவள் கரம் பற்றினேன்.
நின்றாள்.
கண் கலந்தாள்.
புன்னகைத்தாள்.
பற்றிய என் கையுள்
அவள் கையை
பறி கொடுத்தாள்.
உள்ளத்தில் உற்சாகம்
உருமி மேளம் கொட்டியது.
பற்றிய கரம் விடாது
தரையில் கால்கள் படாது
பறந்து வந்தோம் வீட்டிற்கு...!

செந்தாமரை



செந்தாமரையாள் முகம் சிவக்க
வந்தாளென் கை பிடிக்க,
கண் நிறைவாய் பார்த்து நின்றேன்,
காதலியின் மனம் இனிக்க...!

பச்சிளம் மண்ணு



என்னக் கொடுமை யிது?
பச்சிளம் மண்ணு,
பார்வையிலே பிஞ்சு,
பருவமெய்தினாளாம்.
இயற்கையின் நிகழ்வன்றோ இது?
இதற்கெதற்கு விழா?
கண்மலங்க விழிக்குமவளை
கண்ணெழுதி, அரிதாரமெல்லாம் பூசி,
பட்டாடையுடுத்தி
ஊரெல்லாம் அழைத்து
விருந்து கொடுத்து,
தன் மகளை ஊரார் முன்
நாணித் தலை குனிய வைக்கின்ற
பெற்றோரை என்ன சொல்ல?
பேதமையென்றா?
பணத்தாசையென்றா?

Friday, 21 June 2013

பாட்டு ஏன்?

உன்னழகைக் கண்டு நான்
உண்மையிலே
மதி மயங்கி போனேனடி.
இதழ் மொட்டில்
வெடித்து வரும்
புன்சிரிப்பு,
இரு விழியால்
எனைக் கொய்யும்
லாவகம்.
கருங்கூந்தல் நாகமென
பின்னித் தோள் தழுவ,
கை விரலில்
பாட்டு வைத்து
என்னை அதிர வைக்கிறாய்,
தேவதையே!
ஒரு நொடியில்
ஓராயிரம் பாடல்
உனக்கெனவே
நான் தருவேன்,
வா என்னோடு

சேர்ந்தேன்














எனைக் கண்ட மறு நொடி
எங்கிருந்தோ முளைத்தக்
காற்றணையக் கால்களுடன்
கடிதே வந்தாள்.
கட்டியணைத்துக்
கலங்கி நின்றாள்.

நேற்றிரவுப் பேசவில்லை
முந்தினமும் காணவில்லை,
பிரிவில்லை
சிறு பிணக்கம் தான்,
என்றாலும்
உயிர் மூச்சுக் காதலாய்
அவள் வாழ்வதால்,
இனியும் தாளாதென்று
ஓடிவந்தேன்.
எனைக் கண்ட மறு நொடி....

நிலவு
















கார்மேகக் குவியலிடை
பளீர் நிலவு,
அவள் முகம்...!

பிறவி

முற்பிறவி மறந்துவிட்டோம்
இப்பிறவி கடந்துவிட்டோம்,
இனிவரும் பிறவிகளில்
இணைபிரியா வாழ்வுதனை
நமதென்று வாழ்ந்திடுவோம்!