Friday, 2 October 2015

பிறந்த நாள்

















என்னவளின் பிறந்த நாள்.
என்ன வேண்டுமென
ஆவலாய் கேட்டேன்.
மனதிற்குள்
என்னைத்தவிர
என்ன கேட்பாளென
குறுகுறுத்தது.

அருகில் வந்து
மாலைத் தேநீரை தந்து
மந்தகாசப் புன்னகையை கொண்டாள்.

எனக்கென்ன தேவை?
எல்லாமே தந்து விட்டாய்,
உந்தன் புன்னகைக்கு
தவமிருப்பதைத் தவிர
வேறு பொன்னகையில்
விருப்பமில்லை என்றவளை

ஆசையாய் அரவணைத்து
அன்புடன் முத்தமீந்து,
அழைத்துப் போனேன்
அருகிருந்த ஆசிரமத்திற்கு.

எத்தனை வண்ணமின்னும்,
இதழ்களில் புன்னைகை சூடி
அங்குமிங்கும் ஓடியாடும்
தன்னிலை மறந்த
இளம் பூஞ்சிட்டுகள்

இந்த நாள் முழுதும் நாம்
இங்கிருந்து மகிழலாம்
உன்னை நான் அறிவேனன்பே!

ஒரு தினம் இங்கு வாழ்ந்தால்
உன்மனம் உருகும் நேசம்.
எனக்குமே மகிழ்ச்சி கூடும்
நாமிங்கு நாள் முழுதும்
சேவைகள் செய்வோமடி.

ஒரு தின சேவையிங்கு
ஒரு போதும் போதாதெனினும்
இது ஒரு தொடக்கமென்று
இருவரும் கொள்வோமே..

மீட்பதெப்படி?


மறக்கவியலா நாட்களில்
சிக்கித் தவிக்கும் மனதை
மீட்பதெப்படி?

உத்தரவின்றி உள்ளே வா

ஒரு நொடி பிரிந்த போதும்
உன்னையே நினைக்க வைத்தாய்
நினைத்தெனை உருக வைத்தாய்

கண்மலர் துஞ்சாது
கடுஞ்சுரம் மூச்சாகி
வெளிறிய நாக்கோடு
பேச்சினை குழற வைத்தாய்.

உன் காதலை பருகினால்
கடுஞ்சுரம் போகுமாம்
மலர் கரம் பட்டதும்
விழிமலர் துஞ்சுமாம்
பொன்மதி கண்டதும்
உடல் தளிராகுமாம்

உத்தரவின்றி உள்ளே வா
உனக்கென உயிர் வளர்க்கும்
எனைக் காண!

அதிசய ராகம்


சொல்ல வந்து எழுதிய
அழகிய காவியங்களெல்லாம்
உன் அதரத்தில் பூக்கின்ற
அதிசய ராகமானதோ?

என் வழி

நானும் நீயும் தனிமையில்
எனக்கான உன் நிகழ்வுகளில்
உனக்கான என் பொழுதுகளில்

மென்கரம் பற்றி
கலகல ஓசை கேட்டு
எனைத் தொட்டோடும் உனைப்
பிடிக்கும் முயற்சியில்
வேண்டுமென்றே தோற்று

அத்துணை மகிழ்ச்சியில்
அணங்குனைக் காண
என்ன தவம் செய்தேனடி!

சிற்சில துணுக்குகளாய் இருந்தாலும்
இணைத்து வைத்தால்
உன் இதயத்தால்
கோர்த்து வைத்தால்
இமயம் தொடும்.

பேரின்பம் பெற
எத்தனையோ வழிகளாம்
எனக்கென்ன தெரியும்
உன் இமை வழியைத் தவிர?

இதய தீபம்












இதயத்தின் இருட்டறையில்
சுருண்டு கிடந்தயெனை
ஒளியூட்டி மெருகேற்றி
உற்சாகம் கொள்ள வைத்தாய்!
நின்னொளியில் நான் வாழ
என்னொளியில் பிறர் வாழ
விண்ணொளியின் வசந்தமென
என்னாளுமென் இதயத்தின்
தீபமென நீ வாழ்க!

Thursday, 1 October 2015

உணர்வாக கலந்திட்டாள்


நதியலையில் நீராடி
நரம்புகளில் குளிரேற்றி
நகக்கண்வழி சூடேற்றும்
நினைவுகளின் சுடரென்றாள்.

பூமலரும் பொன்புலரி
பூவிதழில் தேனருவி
பூஞ்சிறகின் இதம் கொண்டு
பெண்ணவளோ எனை வென்றாள்.

உருவங்கள் பொய்த்திடவும்
உலகத்தை மறந்திடவும்
உருவகமே இல்லாத
உணர்வாக கலந்திட்டாள்!