Saturday, 22 August 2015

மனம்

நேற்று நண்பர் #ஆதவப் பிரியன் பக்கத்தில் நானும் சரவணா ஹரியும் தொடர் பின்னூட்டமிட்டதை உங்கள் பார்வைக்குத் தொகுத்துள்ளேன்

சரவணா ஹரி.
முற்றற்ற வளைதலுடன்
வழக்கொழியா விளைதலுடன்
கணுக்கணுவாய் இடர்களுடன்
விடைபகறா
வினாக்களுடன்
விதிமுடியா
தொடர்தலுடன்
முடிவற்ற
முடிவிலியாய் ....
தேடிக்களைத்தாலும்
கண்டே திளைத்தாலும்
அடுத்தென்ன என்றதனையே
அடுக்கிச் சென்றிடும் வாழ்க்கை...

Maha Suman
கிடைக்காதோ, கிடைத்தாலும் ஏற்காதோ இந்த பாழ்மனது?

சரவணா ஹரி
ஏற்றாலும் நிலைத்திடுமோ அச்சுழல் மனது,..

Maha Suman
நினைவுகளோ, நிகழ்வுகளோ நிலைக்காது, நிலைப்பது எதுவென்றும் அறியாது, அறியாமையில் உழலும் அம்மனது

சரவணா ஹரி
நிகழ்வுகளில் நினைவுகளில் நிலைப்பற்ற நிழல்மனது
அழலென
அறியாமையென உழன்றிடும்
பிறழ்மனது
இல்லையெனக் கொண்டேயதில்
இருத்திக்கிடந்திடும்
இயல்மனது....

Maha Suman
இருப்பதை இல்லையென, இல்லாததை இருப்பதனெ கொள்ளும் மனது, இறுதிவரை இயல்பற்று, இயல்பற்றதை அறியாது தெளிவற்றுத் திரியும் மந்தி மனது

சரவணா ஹரி
தெளியப் பிடிக்காத
தெரிவை மனது
அறிய முனையாத
அரிவை மனது
தாவித் திரிந்திருக்கும் கவி மனது
தாழப் பறந்திருக்கும்
பட்சி மனது
சித்தென லயித்திருக்கும் சிறுமனது
பித்தென பிதற்றிடும் பேதை மனது...

Maha Suman
விதைப்பு ஒன்றாய் இருப்பினும் முகிழ்ப்பது வேறாய் இருக்குமோ? சித்தென பித்தென வித்தைகள் காட்டிடும் விந்தை மனது

சரவணா ஹரி
விந்தை காட்டியே
வீழும் மனது
விடைகாண விளையா
விளம்பல் மனது
முகிழ்ப்பதில் மூழ்கிடும்
ஆழ் மனது
ஆடிஅலைந்திடும்
பேய் மனது
உள்ளதைப் பகரா
வேட மனது
புரிதலில் முயலாப்
பெட்டை மனது....

Maha Suman
எத்தனை மனதை கொண்டிருந்தென்ன? கிடைப்பதை விட்டு பறப்பதை நாடும், இருப்பதை இழந்து இழந்ததைத் தேடும், இறுதியில் எல்லாம் விடை பெறும் வேளையில் மனமே மாயமென்றாகிட நாணும் மந்தையில் ஒன்றாய் ஆடும் மனது

சரவணா ஹரி
இருப்பதை தொலைத்து
தொலைத்ததில் அலைந்து
அலைந்ததில் களைத்து
களைத்ததில் ஓய்ந்து
ஓய்ந்ததில்
அடங்கியே மாய்ந்திடும்

மாய மனது.,

பெரிது



என் வலியை பெரிதென்று எண்ணியிருந்தேன்
பிறர் வலியை உணரும் வரை
என் மகிழ்வை பெரிதென்று எண்ணியிருந்தேன்
பிறர் மகிழ்வில் நான் மகிழும் வரை

தனிமை



செவிப்பறையில் நிலைத்த உன் விளியில்
தவித்த என் தனிமை துளிர்க்குதடி

மருந்து



என் மனக்காயங்கள் மறைய
உன் மாயப் புன்னகையே மருந்து

எங்கு சென்றாயடி


























எங்கு சென்றாயடி எந்தன் சிரிப்பழகி

வார்த்தையின் விளிம்புகளில்
சிரிப்பினை தேக்கிவைத்து
செல்லப் பெயர் கொண்டுனை அழைக்கையில்
சங்கீதச் சிரிப்பொன்றை சிதறவிடும்
மாருதியின் சித்திரமும் பழிக்கும்
மேனகைப் பேரழகே
எங்கு சென்றாயடி

அன்பின் அதீதத்தை
அகப்பையில் பதுக்கிவைத்து
சொல்லவொணா கோபத்தை
பொறித்தக் கடுகாய் பொழிந்துவிட்டு
அடுத்த நொடி அரவணைத்து
அழுமெந்தன் கோகிலமே
எங்கு சென்றாயடி

வாழ்க்கை தந்த ரணங்களையும்
அதில் விளைந்த வலிகளையும் மறைத்து
ம் மென்ற ஒற்றைச் சொல்லில் மென்றபடி
விழி துளிர்க்க மொழி கடக்கும்
விந்தையுருவான எந்தன்
வான் மயங்கும் வெண்ணிலவே
எங்கு சென்றாயடி

இன்றிரவே வந்து என்
நெற்றிமுடியூதி
பிடித்ததென நீ கேட்கும்
நுதல் முத்தத்தை எனக்குத் ஈந்து
அகங்குளிர்ந்து
முகமலர்ந்து
ராதிகா சிரிப்பொன்றை
ரத்தினமாய் வழங்கிடவேனும்

உடனே வந்திடடியென்
உலகாளும் தேவதையே!

Thursday, 20 August 2015

போர்க்களம்


சரித்திரத்தில் பொறிக்கப்படவேண்டிய
சாதனை வெற்றியின் முடிவில்

பிளந்து கிடந்த கோட்டை வாயில்களும்
சிதைந்து சிதிலமடைந்திருந்த
சுற்றுப்புறச் சுவர்களும்
உருண்டு கிடந்த தலைகளும்
உயிரற்று கிடந்த உடல்களும்
பெருகி ஓடிய இரத்த ஓடையும்
வரவழைத்திருந்தன
வல்லூறுகள் ஆயிரத்தை

ஒரு வெற்றிக்குள்
பல்லாயிர தோல்விகள் புதைந்திருக்க
ஒரு வீழ்ச்சியில்
எண்ணற்ற வாழ்வு பொலிவிழந்திருக்க
ஒரு மரணத்தில்
பல உயிர்களுக்கு உணவு கிடைத்திருக்க

நீரும்
நிலமும்
காற்றும்
வானும்
நெருப்பும்
தமக்கு ஏதும் ஆகாததைப் போல்
பட்ட கறையை துடைத்துவிட்டு
சுழன்றோடத் தொடங்கின

நான் மட்டும்
என்னை வெல்லும் முயற்சியில்
பெற்ற வலிகளை
நாக்கொண்டு சுவைத்து
நரக வேதனையை சொல்லமாட்டாமல்
மண்ணை குழித்து
என்னை புதைக்க
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்

சுற்றிக்கொண்டிருந்தன
ஆயத்த நிலையில் பல நூறு
வல்லூறுகள்...!

Friday, 14 August 2015

வாழிய சுதந்திரம்


சுதந்திரத் திருநாள்

பள்ளிப் பருவத்தில் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்ததில் தொடங்கிய சுதந்திர தின, குடியரசு தின நினைவுகள்,  பள்ளிப் படிப்பில் மேல்வகுப்புகளில் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு வருடமும், அதற்கான கொண்டாட்ட நடனத்தில் ஒரு வருடமும் கலந்து கொண்டதில் முகிழ்க்கின்றது.

ஒவ்வொரு சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டத்தின்போதும் அப்பா என் சடடையில் குத்திவிடும் தேசியக் கொடியை எத்தனை பெருமிதம் கொண்டு பார்ப்பேன் என நினைக்கும்போது முகமெல்லாம் புன்னகை மலர்வதை மறுக்கவியலாது. அந்தக் கொடியை குத்தியவுடன் உள்ளம் உற்சாகமாகி நான் தான் கொடி காத்த குமரன் என்ற எண்ணத்துடன் என் தேசியக் கொடியை யாரேனும் தரம் தாழ்த்த நான் விடுவேனோவென துடித்த கணங்கள் எண்ணங்களில் ஊஞ்சலாடுகின்றன.

ஆயினும், சுதந்திரத்தின் பெருமையையும் அதை பெறுவதற்கு நம் முன்னோர்கள் பட்ட வேதனையையும் எனக்குக் கற்பித்தது ஒரு சினிமாதான். “கப்பலோட்டிய தமிழன்” என்னும் அந்த சினிமா நடிகர் திலகம் சிவாஜி ஐயாவால் நடிக்கப் பெற்றது. எனது குரு மாமாவின் தூண்டுதலில் ஒரு நாள் அத்திரைப்படத்தை நான் வீட்டில் கண்டேன். செக்கிழுத்த செம்மலையும், தொழு நோயால் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வரும் சுப்பிரமணிய சிவாவையும் பார்த்துவிட்டு எத்தனை நாட்கள் மனபாரத்துடன் அலைந்தேனென நினைவில்லை.

அன்று முதல் சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் பட்ட வேதனை உள்ளத்தில் நீங்காமல் நிலைகொண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றோருடன் கொடி காத்த குமரனும் என் நெஞ்சத்தில் உண்மையான தலைவர்களாக இன்றும் நிலைத்திருக்கின்றனர்.

மாமாவின் தூண்டுதலில் நான் சிறு வயதில் படித்த சத்திய சோதனை புத்தகம் (முழுமையாக படித்ததாக நினைவில்லை) ஏற்படுத்திய பாதிப்பும் இன்றும் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு “சிறைச்சாலை” (காலாபாணி) திரைப்படம் கண்டபோது கடைசி காட்சியாக மகாகவியின் 

“தண்ணீர் விட்டா வளர்த்தோம்- இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்”

என்ற வரிகளை படிக்கும்போது நிற்க மாட்டாமல் கண்ணீர் ஒழுகியதை அம்மா அப்பா பார்த்துவிட்டு என் கையை அழுத்திப் பிடித்தது இன்னும் என்னால் உணரமுடிகின்றது.

இரு வருடங்களுக்கு முன்பு அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா போனபோது செல்லுலார் சிறைச்சாலையை நேரில் போய் கண்டு அதன் அமைப்பும் அங்கு சிறைபட்டிருந்தோரின் கடுந் தியாகங்களும் இன்று எவ்வளவு குழந்தைகளுக்கு உணர வாய்ப்பிருக்கின்றது என்ற ஏக்கம் விளைந்தது.
நாம் நமது குழந்தைகளுக்கு சுதந்திரத்தின் பெருமையையும், அதற்கான நமது தியாகத்தையும், அப்படிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய நேர்மையையும் கற்றுக்கொடுக்கின்றோமா ? என எனக்கு ஆதங்கமாக இருக்கின்றது.

மாறாக நம் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்பது எந்த இடையூறும் இல்லாமல் சமூக வலை தளங்களை உபயோகப் படுத்துவதும், எந்த தலைவரையும் எவ்வளவு கீழ்த்தரமாக இகழ கிடைக்கும் வாய்ப்புமே சுதந்திரமென பொருள்படுகின்றது.

எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் குடியரசு தலைவரை, அந்த நாட்டின் கொடியை, அந்த நாட்டின் தேசிய கீதத்தை அவமதிக்க முடியுமா? அதையும் சகித்துக் கொண்டு இருக்கின்ற இந்த மாபெரும் தேசத்தை நாம் மாசுபடுத்தாமல் காப்பது ஒன்றே நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்குமென கருதுகின்றேன்.

ஜெய் ஹிந்த்