Thursday, 11 June 2015

ராம் கமல்



அன்புச் சகோதரன் ராம் எனக்கு அறிமுகமானது ஒரு பொது நலத்தொண்டினுக்காக. இரத்த தான முகாம்கள் நடத்துவதிலும தவிப்புடன் இருக்கும் யாருக்கும் உதவுவதற்கும் தயங்காத உள்ளம் படைத்தத் தம்பியவன்
ஆசிரியப் பணி புரியும் ராம், தமிழ் சிறப்புப் பாடமாக கல்லூரியில் பயின்றிருக்கிறார். அவருடைய வளமையான தமிழ் அவரது கவிதைகளில் தெள்ளெனப் புலப்படும்.
சிலேடை மொழிதலில் தன்னிகரற்றவர்
பெண்மைக்கும் தாய்மைக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவர். அதே நேரம் அநீதியைக் கண்டால் பொங்கியெழவும் தயங்க மாட்டார்
அண்மையில் அவர் எழுதிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் மனைவிகளின் நிலை குறித்த கவிதை என்னை உலுக்கிவிட்டது
வர்ணநிற மில்லா
அரிதார மணியா
கலவை கரையா
துளிச் சாயமூறா
எனத் தொடங்கும் கவிதையிலும்
புளிச்சாற்றினை நீக்கி
பெருங்காயம் தகர்த்து
வெங்காயம் தாங்கிட
என்னும் கவிதையிலும் அவரது சிலேடை மொழியின் திறனை கண்டறியலாம்
அன்றொரு நன்னாள்,
ஆங்காங்கே பிணக்குவியல்
இனப்படுகொலை ஈழவ
ஈனசாதியின் காயும்
எனத் தொடங்கும் கவிதையில் தமிழன் தனிமை படுத்தப் படுவதை சாடியிருக்கிறார்
‪#‎கற்பியல்‬.
உள்ளத் தூய்மையுடையான் ஓதிய
நூலாதலால் இல்லறம் பூண்டான்கண் கற்பிதம்-
தெள்ளியஆண்மகன் கையில் உரைபவள் அத்யாயம் நாணுடையாள் பெற்ற நலம்..
இக்கவிதையில் கற்புக்கு இலக்கணம் வகுக்கின்றார்
என்ன தவம்
செய்தேன் யசோதா.,
எனத் தொடங்கும் கவிதையில் கொஞ்சி விளையாடுகிறார்
இன்னும் பலப்பல கவிதைகளை புனைந்து நமக்கு சொல்லவொணா மகிழ்ச்சியை தருவித்துக்கொண்டிருக்கிறார்
உயர்ந்த பண்புகள் நிறைந்த அவர் மென்மேலும் புகழ்மாலைச் சூடி உடலும் உள்ளமும் நலமுடன் கூடி பெறுவாழ்வு வாழவும், அவரிடம் பயிலும் சிறார்களும் மிகச் சிறந்த நிலையடைய உதவி செய்தவாறும் தம்பி ராம் இன்னும் தமிழில் பலப்பல சாதனைகள் புரிய வேண்டி வாழ்த்துகிறேன்

காட்சிப்பொருள்

அழிந்து கொண்டிருக்கும்
அற்புதக்கலைகளிலொன்றை
உயிர் வாழ உதவும்
துரும்பென எண்ணி
ஒரு கையில் கோல் பிடித்து
மறு கையால் கால் பிடித்து
அந்தரத்தில் ஊஞ்சலாடி
நீள் வட்டத்தில்
ஒற்றைச் சக்கரத்தில் உருண்டோடி
நெருப்புடனும் விளையாடி
மிருகங்களுடன் உறவாடி
மனிதர்களுக்கு காட்சிப்பொருளாகி
பிறர் மகிழ கரணமடித்து
எத்தனை செய்தாலும்
எம்முளம் காணாது
குறைந்த உடுப்பை உற்று நோக்கி
புலரும் தேகத்தில்
புண்கண் பதித்து
மனதைக் காணா மனிதரைவிட
அன்பை பொழிந்தால்
அன்பு செய்யும்
மிருகங்களே மேலன்றோ..!

பறக்கும் பஞ்சுப் பொதி




அடர்ந்த கார்கூந்தலின் நுனிச் சுருட்டலில்
எண்ண சுழிவுகளை பதித்து வைத்தேன்
சிவந்த இடைதொட்டு
சிதறாத முத்தமிட்டு
செஞ்சாந்து வரம்பெறுமோ என்றிருந்தேன்.
ஒற்றைக்கால் பதித்து
உந்தித் திரும்பிய வேளைதனில்
சுழன்றடிக்கும் விசிறியாய்
சிதறிவிட்ட என் எண்ணத் துகள்களை
கோர்த்தெடுத்து மாலையாக்கி
சூடிக் கொடுக்க காத்திருந்தேன்,
கனவு கலைய
கைவிரல்களை விட்டு
பறந்து கொண்டிருந்தன
தலையணையின் பஞ்சுப் பொதி..!

எஞ்சியவை ஏது




கார்முகில் தொட்ட
பூமல ரெந்தன்
காதினில் வந்துன்
காதலைச் சொல்லும்.


ஆற்றினில் மெல்ல
ஆடிடு மோரிலை
ஆசையாய் வந்துன்
அழகினை சொல்லும்.

தேவதை சூடிய
செந்நிற மேகலை
உன்னிடை ஆடி
உவமைகள் சொல்லும்.

சூழலில் சிக்கிய
சிறு துரும்பாடியே
சீறுமுன் கோப
செவ்வரி சொல்லும்.

பாரடி நீ தமிழ்
பாவினைப் பாடிட
தேங்குரல் தீந்தமிழ்
வாசனை சொல்லும்.

பார்ப்பவை யாவும்
பலவிதமாக
உன்னையே எனக்
குணர்த்துவதாக.

என் நிலைக் கூற
எஞ்சியவை யென
ஏதுமில்லையடி
உன்மனம் ஒன்றே!


அவளே நிலையாய்



ஓராயிரம் நினைவுருக்கள்
ஒன்றின் எழுச்சியை மற்றது தாக்கி
உணர்வுகள் பெருக்கெடுத்து சிதற
நிலத்தடியில் குமுறும் கனலை
கட்டை விரலில் அடக்க நினைக்கும் கற்பனாவாதியாய்
இமையிறுக்கி அகம் நிறுத்த முனைகையில்
மனம் தொட்ட அவள் வாசங்கொண்டு
சட்டெனப் பெருகிய மழையில்
அத்தனை உணர்வுகளும் அமிழ்ந்து
அவள் மட்டுமே நின்றாள்

வாழ்வியல்





நேற்று ஒரு பூச்செடிகள் விற்பனை செய்யும் இடத்திற்குச் சென்றிருந்தேன். ஆயிரக் கணக்கில் பூச்செடிகள் விற்பனைக்கு இருந்தன. எவ்வளவு ஆர்வம் இருந்திருந்தால் இவ்வளவு செடிகளை சேகரித்து ஒரு தாய்போல் பாதுகாத்து விற்பனை செய்துகொண்டிருப்பார்?
ஆனால், தோட்டத்தில் வியாபாரத்திற்காக இல்லாமல் இச்செடிகளை வளர்க்கும்போது இருந்த ஆர்வமும், மகிழ்ச்சியும் இப்போது அவரிடத்தில் இருக்குமா? சந்தேகம்தான்.
வியாபாரமாகிவிட்ட பொழுதுகளில், வருவோரையும், போவோரையும் பார்க்கவும், பணம் வாங்கிக் கொடுத்து, பட்டுவாடா செய்யவுமே அவருக்கு நேரமிருக்கும்.
தன் குழந்தைகள் போல் நேசித்த பூச்செடிகளிடம் கொஞ்ச அவருக்கு இப்போது நேரமிருக்குமா?
வாழ்க்கையும் அப்படித்தானோ?
ரசித்து ருசித்து கழிய வேண்டிய காலங்கள், வரவு செலவு பார்க்கப்பட்டு, வியாபார வாழ்க்கையாகி, பொன்னான நேரத்தை பொருளுக்கும், பகட்டுக்கும் விற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கையை விற்றுப் பெறுவது ருசிக்கிறதா?

Tuesday, 9 June 2015

விதைத்திடடி பேரன்பை



உற்சாகத் தேன்மொழியின் உள்ளூரும் ஆசையினில்

பித்தாகிப் போனவனை பேதலிக்க வைப்பாயோ
வற்றாதக் காதலிசை வழிந்தோடும் நெஞ்சமதில்

வெட்டாதே விழிகொண்டு விதைத்திடடி பேரன்பை