Sunday, 5 October 2014

அம்மாவின் குரல்

























ஈரம் சூடிய இரவொன்றில்
தென்னைமரங்கள் 
வெட்கப்புன்னகை பூத்திருந்தன.
ஒளிமழையில் நனைந்தவெந்தோட்டத்தில்
கூச்சலிட்ட பறவைகளுடன்
என்மனமும் கும்மாளமிட்டது.

கரம்பற்றி தோள் சாய்ந்த 
வான்தேவதை கண்களிலே
ஆயிரம் நிலவு தோழமை கொண்டிருந்தது.

காதலருக்கு இரவின் கவிதைகளில்
ஈர்ப்பு அதிகமென நிதர்சனமானது.

எழுதாத எண்ணற்ற கவிதைகளை
உள்ளடக்கிய அவளையும்,
எண்ணத்தில் கவிதைக்குடையை
விரித்துவைத்த இயற்கையையும்
ஒப்பிட முயன்று
அயர்ந்துதான் போனேன்.

இப்பொழுது எப்பொழுதும்
தொடர வேண்டுமென பேராசையில்
என்னவளின் குளிர்போக்க
இறுகணைத்தபடி
அங்கேயே நின்றிருந்தேன்,
அம்மாவின் குரலெந்தன்
ஆழ்ந்த உறக்கம் கலைக்கும்வரை..!

Saturday, 4 October 2014

நடைபாதையில் ஒரு கல்



மற்ற கற்களுடன் பதித்தபோதே
இது மாத்திரம் சிறிது தலை தூக்கியிருந்தது
சுற்றிலுமுள்ள மற்ற கற்கள்
மிதிபடும்போதெல்லாம் அமைதிகாக்க
கவனமின்றி நடப்பவரின் பாதவிரல்களை
பதம் பார்த்துக் கொண்டிருந்தது

பிடிமானத்திற்கு இடப்பட்ட மண்ணும்
வேகமாய் இளகி
மேலும் இக்கல்லின் ஆட்டத்திற்கு
அடிகோலியது

ஓடிவரும் சிறார்களும்
கவனமில்லா நடைவாசிகளும்
சபிக்காத நாளில்லை

ஓருமுறை அடிபட்டவர்
மறுமுறை அவ்விடம் வரும்போது
தன்னை மிதிக்காமல் செல்வதைப் பார்த்து
அகமகிழ்ந்தது அது

அதன் மகிழ்ச்சியெல்லாம்
பெரு மழைகாலமொன்றில்
சுற்றிப்பிடித்த மண் கரைந்தோட
அன்று அவ்வழி நடந்த அவர்
புரட்டி எடுத்து
ஓரத்திலோடிய சாக்கடையில் தள்ளும்வரைதான்

வாழ்த்தொலி


தேனூறும் இதழ்களில் செந்தமிழ் மணக்க
பாலூறும் மேனியில் புது மணம் பிறக்க
வானுறை தேவர்கள் வாழ்த்தொலி இசைக்க
வாயூற நான் வந்தேன் கவிதைகள் படைக்க

முள்ளிலா மலரென மென்மையை விதைத்து
கள்ளிலா போதையை கண்களில் நிறைத்து
எண்ணிலா ஆசைகள் நெஞ்சினில் பொதித்து
வெண்ணிலாத் தோழியே வா முறு வலித்து

உன் தினம் இதுவென உலகமே அறிய
விண்ணவர் மன்னவர் போற்றிசைப் பொழிய
சுந்தர மலர்களை எங்கணும் சொரிய
வந்திடு உன்னவன் பாக்களும் புனைய!

ஏனிங்கு?


அந்த குட்டி ஒட்டகம் தனது தாயைப் பார்த்து, “அம்மா எனக்கு ஒரு சந்தேகம்” என்றது. தாய் ஒட்டகம், “என்ன மகனே, கேள்” என்றது.
குட்டி ஒட்டகம், “அம்மா, நமக்கு ஏன் முதுகில் இவ்வளவு பெரிய திமில் இருக்கின்றது?” எனக் கேட்க தாய், “அது நமக்கு பாலைவனத்தில் நீண்ட தூர பயணத்திற்கு நீர் சேகரித்து வைத்துக் கொள்ள” என்றது
குட்டி ஒட்டகம் மேலும், “அம்மா, நமக்கு கால்கள் நீளமாகவும், பாதங்கள் மொழுக்கென்றும் இருக்கக் காரணமென்ன?” என்றது. உடனே தாய், “நமக்கு பாலைவனத்தில் மணலில் நடக்க நீளமான கால்களும் இப்பாதங்களும் அவசியம் மகனே” என்றது
மீண்டும் குட்டி ஒட்டகம், “இன்னும் ஒரு சந்தேகம் அம்மா, நமக்கு கண்ணிமைகள் இவ்வளவு நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கவேண்டிய அவசியம் என்ன?” என்றது. தாய், சிறிது கோபத்துடன், “மகனே, நமக்கு பாலைவனத்தில் நடக்கும்போது சுடுமணல் புழுதி அடிக்கும்வேளையில் நமது கண்களை பாதுகாக்க இவை அப்படி இருக்கின்றன” என்றது
கடைசியாக குட்டி ஒட்டகம், தீவிர சிந்தனையின் பிறகு, “அம்மா, அப்படியானால், இந்த திமிலும், நீண்ட கால்களும், பாதங்களும், கண்ணிமைகளும் இவ்விதம் இருப்பது நாம் பாலைவனத்தில் வாழ ஏதுவாக இருக்கையில், நாம் இங்கு இந்த மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்?” என்று கேட்டது

மகத்துவம்


























இருவிழியில் திரையிட்டிருந்த அவ்வேளையில்
இமைக்கதவின்மேல் தன்னிதழ் பதித்தாள்

கனத்த காற்றினில் மிதந்து வந்த
வண்ணத்துப்பூச்சியின் மென்னிறகாய்
விரல் கொண்டு மடை தடுத்தாள்

சிறுகுழந்தையாய் மடியேறியமர்ந்து
மார்பழுந்தத் தழுவி
ஆலிங்கன ஸ்வரலயத்தின்
இசை தொடுத்தாள்

சங்குக் கழுத்தின் வியர்வைத் துளிகளை
ஸ்பரிசித்த இதழ்களுக்கு
உவர்ப்பின் சுவையும்
இனிப்பாய் மாறியது

அலைகளில் நுழைந்த விரல்கள்
கனவுலக காப்பியத்தின்
முதல்வரியை எழுதத் தொடங்கின

மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
மெழுகுமேனியிலெங்கும்
முத்துக்கள் தோன்றி
முத்தமிட அழைத்தன

விரகம் மிகுந்து இறுகிய கணத்தில்
உள்ளே நுழைய இயலாத காற்று
தன் பங்கிற்கு உஷ்ணிக்கத் தொடங்கியது

அவயங்களின் பசியை
பங்கமின்றித் தீர்த்துக்கொள்ள
அச்ச அணைகள் உடைக்கப்பட்டன

ஊடலின் பின்னான கூடலில்
ஒன்றிணைந்து உச்சம் தொட
இத்தனை அவசரமென்னவென
கட்டில் முனகத் தொடங்கியது

மௌனம் பேசியிழைந்த
அங்கங்கள் சப்தித்த
ராகத்தின் தாளவேகம் கூட
ஆர்த்தெழுந்த முனகல் ஒலி
நீண்ண்ண்ண்டொலித்து நின்றபோது
மகிழ்ச்சி வெள்ளமங்கு பாய்ந்திருந்தது

ஈருயிர் இணைந்து
ஓருயிரான அந்நொடிக்குத்தான்
எத்தனை மகத்துவம்!