Thursday, 4 September 2014

பிரச்சினைகள்


அந்த அறையில் குழுமியிருந்தவர்களைப் பார்த்து அந்த ஆலோசகர்  “உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் பலப்பல இருக்கும். ஒவ்வொருவரும் அதன் தாக்கத்தினால் எப்படி அதை சமாளிப்பது என்று கவலையில் மூழ்கி இருப்பீர்கள். நான் அதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பிரச்சினைகளை உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள காகிதத்தில் எழுதி இங்கு உள்ள பெரிய பெட்டியில் போட்டுவிடுங்கள்” என்று சொன்னார்.
அனைவரும் அதைக் கேட்டு அவசர அவசரமாக தங்களிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் தங்களது பிரச்சினைகளை எழுதி அந்த பெட்டியில் போட்டனர். அந்த ஆலோசகர் பெட்டியை நன்றாக குலுக்கி, “இப்போது ஒவ்வொருவரும் வந்து இந்த பெட்டியில் உள்ள காகிதங்களில் எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அனைவரும் சிறிது தயங்கினாலும் சென்று ஆளுக்கொரு காகிதத்தை எடுத்தனர். ஆலோசகர், “இப்போது உங்கள் பிரச்சினைகள் வேறு ஒருவரிடம் போய் இருக்கும். வேறு ஒருத்தரின் பிரச்சினை உங்களிடம் வந்து இருக்கும். உங்கள் பிரச்சினையை அவர் தீர்த்து வைப்பார். நீங்கள் மற்றொருவரின் பிரச்சினையை வாசியுங்கள். அதை தீர்த்து வைக்க முயலுங்கள்” என்றார்

தங்கள் கைகளில் உள்ள காகிதத்தை வாசித்த ஒவ்வொருவரின் விழிகளும் பிதுங்கின. ஆலோசகர் தொடர்ந்து, “உணருங்கள். உங்கள் பிரச்சினையை உங்களால் மட்டும்தான் தீர்க்க முடியும். அதற்கான சூழலும் உங்களிடம் மட்டும்தான் உண்டு. உங்கள் கைகளில் உள்ள மற்றவரின் பிரச்சினை உங்கள் பிரச்சினையைவிட உங்களுக்கு சிக்கலானது. ஆகவே, அவரவர் பிரச்சினைதான் பெரிது என்று எண்ணாமல், என்னுடைய பிரச்சினை எளிது, என்னால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று உணர்ந்து செயல்படுங்கள்” என்றார்

கொல்(ள்)கிறாய்























அன்பு மழையை பொழியத் தெரிந்த உனக்கு
ஆதங்க நெருப்பையும் அள்ளிவீசத் தெரியுமென
அனர்த்தம் நிறைந்த மழை நாளில்
சொல்லிச் செல்கிறாய்

குளிரின் நடுக்கத்தில்
தணலைத் தேடினேனென்பதற்காக
மடியில் தணலை பரப்பிவைத்து
காத்திருக்கிறாய்

விடியாத இரவுகளை
உனக்கென எடுத்துக்கொண்டு
முடியாத பகல்களை எனக்குக் கொடுத்து
கனவுகளை முடக்க முயல்கிறாய்

கற்பனைகளும், கனவுகளும், கவிதைகளுமே
எனது பசியாற்றுமென அறிந்தும்
நித்திரையற்ற நடை பயணத்திற்கென்னை
தயார் செய்கிறாய்

இத்தனையும் நிகழ்த்திவிட்டு
அருகில் வந்து உச்சுக் கொட்டி
ஆலிங்கனம் செய்து
அன்பின் மொழியுதிர்க்குமுன்
மறைந்து கொல்(ள்)கிறாய்

கைப்பை






















அவசரமாய் அலுவலுக்கு கிளம்பையிலும்
அவசியமெனத் தோன்றியதெல்லாமெடுத்தென்
அகம் நிறைத்து
வயிறு புடைத்து நின்றதற்கோர் அடி கொடுத்து
தோளில் தொங்கவிட்டு நடந்தாள்

இடதுதோளில் இறுமாப்புடன் இருந்தவனை
வசதிக்காய் சில நேரம் வலது தோளிலிட்டு
எதிர்வருவோர் கண்படும்படி
எடுத்துச் சென்றாள்

வாகனத்தில் செல்லும்போதும்
தோள்விட்டு நீங்காமல்
தொங்கியே கிடந்தேன்

அலுவலின் இடையிலும்
அழகாயிருக்கே ஏதடி எனக் கேட்டவர்க்கு
புதிதெனச் சொல்லி புன்னகை பூத்து
விலையும் சொல்லி விகசித்தாள்

என்னுள் அவளின் தேவைக்கென
என்னதான் இல்லை?
அவளே என்னுள்
அடங்கியிருப்பதாயொரு எண்ணமெனக்கு

யாரெது கேட்டாலும்
எடுத்துக் கொடுப்பாள்
யாருமெனைத் தொட அனுமதியாள்
பாசமென்றுதான் நானும் நினைத்திருந்தேன்

அடுத்திருந்த அகல்யாவின்
அழகிய கைப்பையை அவள் காணும்வரை..!

சூறையாடல்



















என் பொன்னான கணங்களெல்லாம்
சூறையாடப்படுகிறது
உனது நினைவுகளால்

சாகாவரம்



உன் விரல் தீண்டும் வரை நானும் சாதாரணமே
உனதுயிர் கூடிய பின்னர் எனக்கு சாகாவரமே

Tuesday, 2 September 2014

யாசக யாகம்


















விரித்து வைத்த வானப் போர்வையில்
விதைத்து வைத்திருந்த
வித்தியாசப் பதிவுகளில்
விளைந்த ஒன்றின் பூவெடுத்து
மென்மூச்சின் இழைதொடுத்து
சூடிக் கொடுக்கவென காத்திருந்தாய்

விரவியிருந்த கருமேகக் கூந்தலிடை
விரல் கொண்டளைந்து
காதல் மணம் பரப்பும்
கவின்மலரெனச் சூடி மகிழ வந்தேன்

வெக்கைச் சூழல்கள் பரவிட
தளிர் யாக்கையெங்கும் தகித்திட
கடிமண இசைக்கென காத்திருந்த
கற்பனைக் குதிரைகள் தறிகெட்டோட

கரைந்தோடி கடல் கலந்த நினைவுகளை
மீண்டும் மேகமாக்கி மனவான்புகவேண்டி
யாசக யாகம் வைத்து இறைஞ்சத் தொடங்கினேன்

கடுஞ்சூரியன் கருணை புரிவானா?

விதையெனும் விந்தை




விழியுருட்டி விந்தையென
வெளியுலகைப் பார்க்கிறாய்
சின்னஞ்சிறு விதையெனினும்
வான் பறந்த விந்தையென
உன்னை நான் காண்கிறேன்