Friday, 15 August 2014

உண்ணா நோன்பு

















முரண்டு பிடித்தபடி
மூலையில் முடங்கியிருந்தாள்.
நாளையென் பயணத்தை
நயமாய் உரைத்திடத்தான் முயன்றேன்

ஒற்றையிலெனையிருத்தி
ஊர் சுற்றுகிறாயென பகர்ந்து
கண்களில் ஈரங்கசிய
மனம் கனத்திருந்தாள்.

ஆசுவாசப்படுத்தலில்
எடுத்த முயற்சிகளை
அணங்கவள் எடுத்து
இடுப்பில் சொருகியபடி
உண்ணா நோன்பினைக் கடைபிடித்து
காந்தியை கௌரவித்தாள்

வீம்புக்கு நானும்
வேண்டாம் உணவென்று சொல்லி
எனக்கொரு மூலையை
எடுத்துக் கொண்டேன்.

அதுவரை போராட்டத்தில்
அவளுக்கு வெற்றியாயிருந்தும்
அந்த நொடி முதல் தராசு
என்பக்கமானது.

என்மேலிருக்கும் அன்பிலும் அக்கறையிலும்
என்னைத்தவிர
அவள் எதையும் விட்டுக்கொடுப்பாளென
எனக்குத் தெரிந்ததுதானே!

Sunday, 10 August 2014

உடுத்திக் கொள்
















உணர்வுகளை பிழிந்தெடுத்து உலர்த்தி
சொட்டும் ஒவ்வொரு துளியிலும்
ஆழ்மன ஓசை அபரிமிதமாய் வழிவதை
தனித்திருக்கும் அறையில் பிண்டமாயிருந்து
சாளரத்தின் வழி ரசிக்கின்றேன்.

ஓங்கிய கதிரவனின் சுடர்பட்டு
அகமிருந்து விலகாத துளிகளும்
பாஸ்பரஸாய் பறந்த வெளியில்
கரைந்து போவதையும் காண்கின்றேன்.

உலர்ந்தபின் அதையெடுத்து
கிழிந்த பகுதிகளில் ஒட்டுவித்து உடுத்தி
மேலும் சில உள்ளுணர்வுகளைக் கொட்டி
ஈரமாக்கி வைக்க நினைக்கின்றேன்,

என்றேனும் நீ வருவாய்,
எனையெடுத்து உலர்த்தி உனதென்று
உடுத்திக் கொள்வாயென்ற எதிர்பார்ப்புடன்..!

Friday, 8 August 2014

உனது பயணம்

புறத்தணுப்பில் பூமியே அமிழ்ந்திருக்க
மனக்குளிரைப் போக்க 
மடிக்கணப்பில் சாய்ந்து
விரல் சொடுக்கின் வழி
வேதனையை உதிர்த்திருந்தேன்

சங்கீத சிணுங்கலுடன் நீ அழைக்க
பூவிழிக்குள் புகுந்தவனின்
புன்னகைக்கு உயிர் கொடுத்தாய்

வியர்க்காத நுதல்மீது
விரல் கொண்டு துழாவி
சுருள் கேசம் விலக்கி
சுவையிதழால் ஒற்றி
நீங்காது ஆட்கொண்டேனெனச் சொன்னாய்

வேலையெனும் வெந்தணலில் நானின்று ஆழ்ந்திருக்க
மழைச்சாரல் சுவாசித்து
எனைவிடுத்த உனது பயணம்
எவ்வாறு உள்ளதடி என்னுயிரே!

எனது தொல்லை

கார்முகில் சூழ்ந்த கருநிற வானம்
கற்பனை துள்ளும் பனிக்குளிர் வாசம்
கூடடையும் பறவையின் குதூகலத்துடன்
வீட்டினுள் அடியெடுத்து வைத்தேன்

இன்னிசை பொங்கி மனம் நிறப்பி
வீணையின் நாயகனே வாவென்றழைக்க
விம்மிய மகிழ்வுடன்
தாவிச் சென்று அருகமர்ந்து
பொன்னே, மணியே,
கண்ணே, கரும்பே, காவியமே,
மாணிக்க வீணையை மடியிருத்தி
மயக்கும் இன்னிசையை தந்தாயடி

வேண்டும் பரிசளிக்க மன்னவனில்லை
என் மனமாட்சி செய்யும் வீணாவுந்தன்
மன்னவனாதலால்
என்ன வேண்டுமோ கேளென்றேன்
அரும்பிய புன்னகையுடன்
அன்னவள் மொழியுதிர்த்தாள்.

என்றும் என்னவனாய் நீயிரு
எனை மறவா நெஞ்சம் நீ கொள்ளென்றும் சொல்லி
இப்பிறவியில் வேறேதும் வரம் தேவையில்லையென்றாள்.

அன்னவளின் விரல் பற்றி
என் கரத்தில் சிறைவைத்து
உனக்காக பிறந்தவனின் உள்ளத்தில்
உனையன்றி வேறேது கண்மணியே,
எப்பிறப்பும் நீயே எனக்கு வேண்டுமென்று
வரங்கோரி தவமிருப்பேன் ஏந்திழையே என்றேன்!

பாவம்தான் அவள்,
இனிவரும் பிறவியிலும்
எனது தொல்லைகளை தாங்கியிருக்க..!

Wednesday, 6 August 2014

எளிது














எதுவும் எளிதாகத்தான் இருக்கின்றது
கடந்து முடிக்கும்போது
இடைப்பட்ட வலிகளின் எக்காளங்கள்
இதழ்மடித்துச் சிரித்த ஏளனங்கள்
ஏகாந்தமெங்கும் நிறைந்த அழுக்காறின் அனர்த்தங்கள்
புறம்பேசிக் கொண்டாடும் புல்லுருவிகளின் புன்சிரிப்புகள்
உரிமைகளை கவர்ந்து தனதாக்கத் துடிக்கும் தறுதலைகளின் பச்சோந்தித்தனங்கள்
இவற்றின் தாக்கங்களை மறந்து
குறிக்கோளில் கூர்பார்வை கொண்டு பயணித்து
எட்டிப்பிடித்தபின்பு
எல்லாம் எளிதாகத்தான் இருக்கின்றது..!
அதுவரை அனைத்தையும்
எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது!

Monday, 4 August 2014

வாழ்வியல்

                        எனது பெற்றோர் எனது முன்னிலையில் இது வரை சண்டை பிடித்ததாக நினைவில்லை. அதற்காக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், வரும் கருத்து வேறுபாடுகளை எவ்விதம் தவிர்க்கலாம், யார் விட்டுக்கொடுக்கலாம் என்றே எனக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
சில அடிப்படைக் காரியங்களில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை வரும் நேரத்தில் விட்டுக் கொடுக்க முடியாமல் போகும் நேரத்தில், அந்த இத்தை விட்டு அகலவே முயற்சிப்பார்கள். அதனால் அந்த காரியத்தின் முடிவு ஒத்திவைக்கப்படுமே அல்லாது தீர்க்கப்படாமல் இருக்காது. இவை நான் என் பெற்றோரிடம் கண்டு படித்தது.
ஒருவருக்கொருவர் என் முன்னிலையில் அன்பு காட்டுவதில் தான் சளைத்தவர் இல்லையெனவே காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். தந்தையைத் தாயும், தாயை தந்தையும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுத்து நான் கண்டதில்லை.
                      இவையெல்லாம் எனது வாழ்க்கைக்கு நான் படித்த பாடங்கள்.

                          ஒரு நாளிரவு எனது உற்ற நண்பனிடமிருந்து அழைப்பு, உடனே வா என. நான் ஓடிச் சென்று பார்த்தபோது அவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு உடனே காரில் கொண்டு போனோம். என்ன ஆயிற்று என போகும் வழியில் கேட்ட போது, அவன் தனது மனைவியை கோபத்தில் திட்டியவாறு அங்கிருந்த கதவை எட்டி உதைக்க, கதவில் துருத்தி இருந்த ஆணி அவன் காலை பதம் பார்த்து விட்ட்து. பாவம். இப்போது துடிப்பது அவனல்லவா? அந்த மனைவியும், மகளுமல்லவா அவனது தேவைகளை இப்போது கவனிப்பது!

Friday, 1 August 2014

காத்திருப்பு




பால்வெளியின் விளிம்புகளில் 
சிறகு விரித்துப் பறந்திருந்த
பல வண்ணமிகு மனத் தும்பிகளில்
உனதும் எனதும் மட்டும் இணைபிரியாமல்
இயைந்திருந்தன

காலச்சுழலின் கோரப்பிடிகளில் சிக்குண்டிராதிருக்க
எல்லைக்கோடு தாண்டிட எத்தனித்தன
அகவெளி துறந்து புறவெளி கடந்து
ஏகாந்தத்தில் நிலைபெற்று
தமதான ஜீவனத்திற்கு
உள் வெளியற்ற அரிய ஒன்றை சிருஷ்டிக்க எண்ணின

பொறுத்திடாத ஏனைய தும்பிகள்
கணிக்க முடியா வஞ்சக முடிச்சுகளையும்
இருள் நேர் இறுக்கிவிடும் சுருக்குகளையுமிட்டு
தாண்டிச் சென்றிடாமல் தடைகளிட்டன

இறுகிய முடிச்சுகளில் 
ஏகாந்தங்களையும் எட்டிப் பறந்தததையும் 
மறந்து மரத்துவிட்டு
அடுத்தோர் பிறப்பிலேனும்
மனம் போல் வாய்க்குமென காத்திருந்தன 
காலச்சுவடுகளின் பாதத்தில்.....