Tuesday, 15 July 2014

நீ எனது நான் உனது


 விழியுனது செயலெனது
உயிருனது புலனெனது
மொழியுனது சுவையெனது
வினாயெனது விடையுனது

மனமெனது உணர்வுனது
செயலுனது பிழையெனது
ஜெயமுனது மகிழ்வெனது
விதையுனது விளைவெனது

கடலுனது அலையெனது
பிறையெனது முழுநிலவுனது
கவியுனது கருயெனது
வரியுனது கருத்தெனது

வரமெனது வாழ்வுனது
ஸ்வரமுனது லயமெனது
சுதியுனது ஜதியெனது
நதியுனது கரையெனது

இதழுனது மதுயெனது
கொடியுனது கிளையெனது
மலருனது மணமெனது
காற்றுனது அசைவெனது

மழையெனது வளமுனது
கதிரெனது விடியலுனது
வானுனது வானவில்லெனது
நிலவுனது ஒளியெனது

பனியுனது குளிரெனது
விரலுனது ஸ்பரிசமெனது
உயிரெனது
உணர்வும் நினைவும் உனதே உனதே!

Monday, 14 July 2014

புதையுண்டு

எண்ணச்சுமைகளை சுமந்து
ஏக்கப் புதையல்களில் தடம் படித்தேன்.
பற்ற கொம்பில்லா அந்நிலை
பற்றற்ற நிலையின் தொடக்கமாயிருக்கலாம்.

கடிவாளப் பார்வைக்கு விசாலம் கிட்டாமல்
காத்திருப்பு நொடிகளின் பாரம்
சகிப்புத்தன்மையின் ஆழத்தை பரிசோதித்தது.
சுற்றியிருந்த அடர்வனத் தோப்பின் தொடர்பற்ற விசாரிப்பும்
நீள்வானத்தின் நிச்சலனத்தை மறைத்தவாறு
துக்கத்தை விதைப்பதாகவே இருந்தது.

தள்ளாடும் தலையும், தவிக்கும் கரமும்
பாதம் பதியா நிலையும்
ஒரு விதத்தில்
பரவசமூட்டுவதாகவே இருந்தது.

ரசிக்கும் தன்மையிருந்தால்
எச்சூழலும் இனிமை பயக்குமென
அன்று அறிந்து கொண்டேன்

தன்னை மறந்த பறவை














நீள்வானப் பாதையின்
நெடுந்தொலைவுப் பயணத்தில்
நீந்திய. மேகத்தின்
நிழலை தொடர்ந்த பறவை
இடைவெளியின்றி
இணைந்து பறக்கும் ஆவலுடன்
மேலே மேலே எழும்பியது.

வாழ்வு தந்த வள்ளலை
விட்டு விலகி
கனவுடன் காதல் கொண்டு
காற்றினை கிழித்து மேலும் பறந்தது.

விரைந்த வேகத்தில்
சிதைந்த காற்று
உந்தியதால்
உருக்குலைந்த மேகம்
துளிகளாய் மாறி
தாயுடன் கலந்து மறைந்தது.

தன்மேல் விழுந்த
துளிகளின் சிலிர்ப்பில்
தன்னை மறந்த பறவை
மேலும் மேகத்தைத் தேடியபடி

மேலே மேலே பறந்துகொண்டே இருந்தது...!

விழியசைவில்

















உலர்ந்த செடியின் வாசம்
உள்ளிருப்பு போராட்டமாய்
நாசித் துளைகளை
குமுறச் செய்தது.

உருட்டிய சோழிகளில்
ஒன்று சிதறி
கணக்கை தவற செய்தது.

காலைப் பொழுதினில்
சுடுங்கதிரவனின் கதிர்
மனத் தளர்வை தந்தது.

தளும்பிய நீர்குடம்
சுமந்த தேவதையின்
இடைவாசம் இழந்தது.

இருந்தும் என் மனம்
உன் விழியசைவில்
வான்வெளியின்

சங்கீதத்தில் இணைந்தது..

நிலவில்லா ஆகாயம்

நிலவில்லா ஆகாயம்

இதய கூடாரத்தின்
கனவு களஞ்சியத்தில்
நினைவுச் சிதறல்களை
மாலையாக்கி
பாதுகாத்திருந்தேன்.

இரவுகளின்
தனிமை பொழுதுகளில்
என் பிம்பத்திற்கு அணிவித்து
அழகு பார்த்திருந்தேன்.

பளீரிட்ட
வெளிச்ச வர்ணப் பகல்களில்
மாலையின் மகத்துவம்
மங்கியதாய் நீ நினைத்தது
என் பிழையில்லை.

ஒளி மழையாயினும்
இருள் தடம் ஆயினும்
என் துணை
இம்மாலையனக் கொண்டேன்.

காலை, மாலை, இரவென
கவிதை பொழுதுகளிலெல்லாம்
நினைவுப்பூமாலை துணையிருக்க,
நிலவில்லா ஆகாயமாய்
காகிதப்பூ வாழ்வில்

வசந்தம் தேடியபடி நான்...!

அதிசயம்




















அதிசயமன்றோ!
நான் பதியம் வைத்த
ரோஜாச் செடியின் பூக்களெல்லாம்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வேளையும்,
ஒவ்வொரு வண்ணத்தில் பூக்கிறது!
அதிகாலையில்
கண்குளிரும் வெண்மையாய்,
இடைப்பொழுதுகளில்
எனை கவனமாய் பொத்தி பாதுகாக்கும்
செந்நிற கோபக் கொழுந்தாய்,
மாலையில்
மயக்கும்,
மந்தகாச பொன்மஞ்சள் வண்ணமாய்..,
இரவிலே
எனை அள்ளி அணைக்கவந்த
பச்சையும், நீலமுமாய்..,
என் காதல் ரோஜாசெடியில்தான்

எத்தனை வண்ணங்கள்..!

முதல் கவிதை

முதல் கவிதை

நினைவடுக்குகளில் எழுத்துக்களை
தேடிக் கொண்டிருந்தேன்,
முதல்முறையாய்
அவளையென் காகிதத்தில் வடிக்க..

ஒவ்வொரு எழுத்தையும்
வேண்டுதல்களுடன்

விதைத்துக்கொண்டிருந்தேன்.

ஒலி வடிவமில்லா எழுத்துக்களில்
உயிர்வடிவம் கொடுக்க
உற்சாகத்தையும் இணைக்க
முயன்று கொண்டிருந்தேன்.

சிற்பியின் செதுக்கல்களில்
சிதறிய துகள்களாய்
காகித குப்பைகள் குவிந்தன.

என்னுள் பதட்டபூமி
சுற்றலின் வேகம்
அபரிமிதமானது.

இரவுத் தென்றல் தொலைந்து
நிலவுத் தோழனும்
அகன்றுவிட்டான்.

எண்ணத்தை வடிக்கவா?
என்னவளின்
வண்ணத்தை வடிக்கவா?

கேள்விகள் மட்டுமே
வியாபித்த மனதில்
விடைக்கு இடமின்றி
முடிந்தது இரவு.

அலுவலக வாசலில்
அவளை கண்ட நொடி
என்னை மறந்து
எனது சட்டைபையிலிருந்து
வெற்றுக் காகிதத்தை
எடுத்துக் கொடுத்தேன்.

வாங்கியவள்,
காகிகத்தை பார்க்கவில்லை,
என் கண்களை பார்த்தாள்.
புன்முறுவல் பூத்தாள்,
வெற்று காகிதத்தில்
முத்தத்தை ஈன்றாள்.

என் வானில்
ஆயிரம் மின்னல்கள்
அவசர தோரணம் கட்டியது.
முதல் கவிதையே

முத்தத்தை ஈன்றது!