Sunday, 5 January 2014

இன்றேனும் தொடங்கவா?

சுழலும் பூமியை
சற்றுத் தள்ளி நின்று பார்க்கிறேன்.

அகண்ட கடலில்
அமிழ்ந்த நிலம், 
எனதுடலைப்போல்.

இயற்கையை சிதைக்கும்
செயற்கை சின்னங்கள்,
என்னுடலும் அப்படித்தானே?

அலைந்து திரியும் விலங்குகளும்
ஆர்ப்பரித்து கூச்சலிடும் மனித இனமும்
உள்ளத்து ஓசைகள்போல்.

வெளிச்சப்புள்ளிகள்
விடியும்வரை எரிந்தாலும்
இருளகற்ற முடியாத ஒரு பக்கம்,

சுட்டெரிக்கும் சூரியனும்
சோர்ந்து போக
செயற்கைப் பிடியிலாழ்ந்த
சூழலுடன் இனியொரு பக்கம்,

எல்லாம் சுமந்து
சுழன்றுகொண்டேயவள்,
அவளின் பிரதிபலிப்பாய் நான்.

சுழலச் சுழல,
காலங்கள் விரைகின்றன,
ஒவ்வொரு வருடமும் விரைந்து
கடந்த வருடமாகின்றது.

எனினும்,
அவளின் தாயன்பையும், பொறுமையையும்
நானிழக்க, இழக்க,
வருடங்கள் மறைய,
நான் நானாக இல்லாமல்
இருகி, இருகி,
மருவிக்கொண்டே இருக்கிறேன்..!

இன்றேனும் தொடங்கவா?
நாட்குறிப்பைக் கிழித்தபடி,
நல்லன்பை,
நல்லுறவை
மனித நேயத்தை,
எல்லோரும் ஏற்க
என்னிலிருந்து தொடங்கவா

நீயற்ற பொழுது














நீயற்ற பொழுதின் மீளா துயரத்தில்
பாய்மரமற்ற படகாய்
பரிதவிக்கிறேன்..

தென்படாத தொடுவானக்கரைக்காக
விழியீரம் கோர்க்கிறேன்.

வருகையில் தென்றலாய்
விடுகையில் புயலாய்
நினைவது கனலாய்
நீள்கிறாய்.

சலசலத்த கொடியுதிர்த்த
உப்பு நீர்
கண்ணீருடன் கலந்தது.

வான் பறந்த
பெயர் தெரியாப் பறவைகள்
என்துயர்
எடுத்துச்செல்ல மறுத்தன.

ஆழ்கடலின் அமைதியில்
அமிழும் ஆசையில்
கரைதேடும் அலைகளுடன் கைகோர்த்து
ஆற்றாமையால்
கவிதை வடிக்கத் தொடங்கினேன்!

இனியமுதே



இனியமுதே,
உன் இதழோரப் புன்னகையிலென் மனம்
இளைப்பாறல் கொள்ளுதடி!

இறையினைத் தேடி


அவ்வப்போது ஊளையிட்டுத்தான் பார்க்கிறது
தனது இருப்பை அறிவிக்க,
தட்டித் தட்டி வைக்க
திமிருகையில் பல் பட்டு
இரத்தம் அங்கங்கே கசிகிறது.

என்னுள் வாழும்
ஒரு குழந்தையென அறிந்தும்
அணைக்க மனமின்றி
அடித்தே அடக்குகிறேன்.
அடங்குவதாயில்லை.

உறங்குவதாய் பாவனை செய்தபடி
ஒவ்வொரு நிகழ்விலும்
தனது இரை தேடி
மூச்சிறைக்க அலைகிறது!

இரையிடும் நிகழ்வுகளை விட்டு
விலகுவதாயிருக்கிறேன்.
வேறென்ன செய்ய?

இரையற்று வற்றி
இருப்பழித்து மறையுங்கால்
எனது இனியொரு குழந்தை
இறையினைத் தேடி
எழும்புமா?

மழையிரவு




முறுவலித்து இதழ் விரித்துதிர்த்த
முத்தத்தேன் சிந்தும்
ஒரு மழையிரவுக்காய்
உயிர் வாழ்கிறேன்..!

காத்திருந்த நொடிகள்

காத்திருந்த நொடிகளால் பூத்த
நல்லாடை நைந்திருக்க,
ஊசிமுனை கோபங்கள்
தாபத்தனிமையை வென்றிருந்தது.

ஈரக்காற்றினிசையில்
மனம் லயிக்கவில்லை.

நிலவும் கூட
நட்சத்திரக்கூட்டத்துடணிணைந்து
மேகமறைவில்
களிப்பிலாழ்ந்திருந்தது.

திராவகமூச்சின் சூடு தகிக்க
எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

உதிரும் மணற்றுகள்களாய்
உன் நினைவை உதிர்க்க வழியின்றி..!

இருபாலர் நட்பு

















இருபாலர் நட்பு

சுற்றுவெளியில்
சூழ்ந்திருந்த கருவர்ணங்கள்,
குமிழியிட்டு குழுமியிருந்தன.
கோபக் கொப்பளிப்புகள் ஏராளம்,
எக்காளத்திற்குக் குறைவில்லை.
பொறாமைத்தீயால்
அச்சுறுத்த முயற்சித்தன.

வெண்பஞ்சு மேகத்தூவலில்
வெண்புறாக்களாய் நாம்,
மெல்லிசையை இதழ்சூட,
முறுவலித்து முகம் மலர,
கரம்கோர்த்து,
விகல்பமின்றி,
பேதமையற்று,
மென் நடை நடந்த
பொன்மாலையில்,

தீக்கண்ணால் நமைக் கண்ட
கருவர்ணங்கள்
கொட்டித் தீர்ந்தன.
நமை குளிப்பாட்டி எக்களித்தன.
வெண்புறாக்கள்
கருமை கொள்ளட்டுமென
கைகொட்டின.

அகத்தூய்மையை
திரையிட முடியுமா?
வெளிர் அன்பில்
கருவர்ணங்கள்
அதீத அழகு பெற்று
மிளிர்ந்தன.

அழகுற
வண்ணபுறாக்களாய்
நட்பின் பெருமையை பறைசாற்றி,
வானில் பறந்தோம் நாம்,.
மேலே, மேலே…!