Friday, 6 December 2013

இப்போதே
















மாற்றங்கள் ஒன்றே வாழ்வின் நியதி,
மாறுதல் என்றும் யார்க்கும் எளிதே!



வறுமையில் மாற்றம்,
வளர்ச்சியில்லா
வாழ்க்கையில் மாற்றம்,
சிந்தனை மாற்றம்,
சிதைந்த தலைமையில் மாற்றம்,

ஆட்டு மந்தையாய்
வாழ்வதில் மாற்றம்,
கூட்டம் பார்த்து
குவிவதில் மாற்றம்!
நோட்டைப் பார்த்து
சாய்வதில் மாற்றம்!

இன்னும் இதுபோல்
எத்தனையெத்தனை மாற்றங்கள்
மாறாமலே!

என்றேனும் இந்நிலை
மாறிடல் வேண்டின்
இப்போதே நாம்
இயங்கிடல் வேண்டும்!

எத்தர்களும்,
பித்தர்களும்
இயங்கும் பட்டறையாய்
அரசியல் சாக்கடை
அசுத்தமாகிக் கிடக்கிறது!

அசூயைக் கொண்டு
விலகிப் போகாது
நல்ல நீர் கொண்டு
நம் நாடு துலக்கி
நல்ல மாற்றங்கள் வர
நாமன்றோ விழைய வேண்டும்!

குயவனும் குவளையும்















தொட்டவர் கைகளில்
துவண்டது களிமண்,
குவித்ததைக் கொண்டு
ஆரத்தில் வைத்து
சுழற்றியபடி கை
சித்திரம் பேச வைத்தார்.

அற்றதை எடுத்து
அப்புறப்படுத்தி
மற்றதை விரலால்
நீவிடச் செய்ய
வளைவாய்,
நெளிவாய்
அழகாய் விளைந்தது
அங்கொரு குவளை!

இடையிடை விரலால்
நீர் தொட்டு நீவிட
நிறைய கோடுகள்
நெற்றியில், உடலில்,
அணிந்தபடி
அழகுற்றது
அந்த குவளை!

குவளையாய் நானும்,
குயவனாய் தந்தையும்,
நன்றி என் தந்தையே!

பிரியம்


சோர்வுற்ற தருணங்களில்
என் நுனிவிரல் தொட்டு
உணர்த்துவதே
உன் பிரியம்..

அவசர செய்தி

பறந்து விரிந்த மாக்கடல்,
பார்க்கவனின் வில்லென
வளைந்த கடற்கரை,
வெள்ளைக் கம்பளம்
விரித்தாற்ப்போல்
மணற்பரப்பு,
பொங்கிவந்த
பேரலைகள்
ஒவ்வொன்றும் என்னிடத்தில்
சொல்லவந்த சங்கதிதான்
எத்தனையோ?

என் மனம்
பரவிக் கிடந்த
கிளிஞ்சலாய்
சிதறிக் கிடந்தது.
கூட்டி எடுக்க
மனமின்றி,
மணலுள் சென்ற
வண்டைப் பார்த்தபடி
உறைந்து இருந்தேன்.

கடலுள் சென்று
அலையுடன் கலந்து
அவசர செய்திகளைக்
கேட்டுவரப்
போகலாம் வாவென
ஆறுதலாய்
தோள் தொட்டாள்.

துணையுடன் சென்றால்
தகவல்கள்
இனிப்பாகுமென்று
எனக்குத் தெரியாதா என்ன?

நீந்தி கரை சேர

காத்திருந்த நெஞ்சத்தின்
கவிதையொலி
கேட்டபடி,
கண்களில் தேடலைத்
தொலைத்து விட்டு,
காரிருளில் கைகளைத்
துழாவியபடி,
எதிர்படும் எல்லாம்
நீயெனக் கொண்டு
காற்றையும், நீரையும்
அள்ளி அள்ளிப்
பருகுகிறேன்,
நீந்தி கரை சேர
நீயின்றி
நீர் மட்டும்...!

மகிழ்ப்”பூ”

நீர் குடிக்கும் வேராய்
நித்தமுன்
நினைவுகளை சேகரித்து
உனைக்காணும் வேளையில்
மகிழ்ப்”பூ”வாய்
விகசிக்கின்றேன்!

எந்த ஒன்று?

பிறவிகள் பலவும்
எனக்கு நீ,
உனக்கு நானென்று
ஒன்றிணைந்த
வான் பறவைகளாய்
வாழ்ந்திருந்த நமக்கு,

இப்பிறவியில்
அன்றுதான்
கருவிழிகளின்
முதல் சங்கமம்!

விழியிருந்து பறிபோன
பார்வையினை
மறுபடியும் பெற்றவனின்
பார்வையில் விரியும்
இயற்கையின் பசுஞ்சோலையாய்,

எல்லையில்லா பனித்தீவின்
எல்லையைத் தொட்டவனின்
பார்வையில் பட்ட
தொடுவான
ஒளிவிளக்காய்,

ஆண்டுகளாய் தவமிருந்து
பெற்றவளின் கைகளில்
தவழும்
சிறு குறிஞ்சிப் பூவாய்,

அன்றுதான்னுன்னை
முதன்முதலில் கண்டேன்.

கண்ட நொடி,
என் கண்கள்
எப்படியோ எனை விட்டு
உனைத்தேடி
ஒட்டிக் கொண்டன.

என் கழுத்து
வேறெங்கும் திரும்பாமல்
உன் திசையில் மட்டுமே
நங்கூரமிட்டிருந்தது.

என் கால்கள் உனை நாடி
நகர நினைத்தும் நகராமல்
நதியின் நடுவில்
அகப்பட்டதாய்
நிலையற்றிருந்தது.

எல்லாம் சரி,
என் மனமெங்கே?
எப்போதோ எனைவிட்டு
ஆகாயம் தேடி
அந்தரத்தில் பறந்து,
விண்மீனைக் கண்டு,
மேகங்கள் தொட்டு,
வானிலவில் பட்டு,
தெறித்து,
திரும்பி,
மண்ணிலுலவும்
பொன்னிலவு உன்
மனம் கண்டு
ஒட்டிக் கொண்ட்து.

இரண்டு மனம்
உனக்கெதற்கு?
ஒன்றெனக்குத் தா!
எந்த ஒன்று?