Wednesday, 16 October 2013
அமைதி
தெருவோர சப்தங்கள்
திகைப்பூட்டவில்லை.
கடலலையின் சீற்றமும்
வியப்பூட்டவில்லை.
வான் வெளியின் வண்ணங்கள்
எனை மயக்கவில்லை.
சுற்றுமிந்த பூமியின்
சுழல் நினைவிலில்லை.
மகரந்த பூக்களின்
மணம் மயக்கவில்லை.
ஆழ்மனத்தில் நிலவும்
அமைதி கண்டு
பார்வையை உள்ளிருத்தி
பயந்துபோய் பார்த்தேன்.
தேடுதல் அற்று
திசைகளும் மறந்து
வாட்டங்கள் தொலைத்து
வெற்றிடம் நாடி
ஆழ்கடல் அமைதியில்
என் மனம்!
Wednesday, 2 October 2013
வாடகை வீட்டிலோர் வர்ண திரைச்சீலை
வாடகை வீட்டிலோர் வர்ண திரைச்சீலை
தென்றல் காற்றின் வரவை
தவழ்ந்தே உணர்த்தியது,
வெள்ளை வண்ணத்தில்
கரு நீல பூக்களும்,
அவற்றை மொய்த்தவாரே
வண்ணத்தை தெளித்தவாறே
வண்ணத்துப்பூச்சிகளும்,
பல நேரம்
மின்காற்றின் வேகத்திற்கும்
ஈடு கொடுக்கும்,
மழை பொழியும் காலங்களில்
சாரலை தாங்கி நிற்க
தாவி சென்று
சாளரங்கள் அடைக்கப்படும்.
உறுத்தாத வண்ணத்தில்
உள்ளத்தை கவர்ந்திட்ட
மென்மை இதயமாய்
உள்வீச்சையும்,
வெளி வீச்சையும்
ஈரக் காற்றையும்,
வெப்பக் காற்றையும்
தன்னகத்தே
வாங்கி நிற்கும்!
வந்தோரின் பார்வைக்கும்
மகிழ்வினையே காட்டி,
அகத்தே உள்ளோரின் மனதிற்கும்
இதமளிக்கும் திரைச்சீலை.
வாடகை வீட்டை
மாற்றும் நிலை வந்தது.
புதிய வீட்டிலோ
சாளரங்களில்லை.
எங்கும் அடைபட்டு
மூச்சு முட்டும் வாழ்க்கையில்
திணறியபடி....!
இனியந்த
அழகிய திரைச்சீலைக்கு
என்ன வேலை?
அழகாய் மடிக்கப்பட்டு
அடுக்கில் புதைக்கப்பட்டது!
இனி,
அடுத்த வாடகை வீட்டிலாவது
சாளரங்கள் இருக்கவேணுமென
மனம் கெஞ்சியது!
Subscribe to:
Posts (Atom)






