Thursday, 1 August 2013

தீரம்



இருவிழிகள் உன் நினைவில்
உருளுதடி பெண்மயிலே,
விருப்பமிலா உறக்கத்தில்
விழி மூடி இமையடைத்தேன்.
வருவாயோ நீயெந்தன்
வழித்துணையாய் காரிருளில்,
உருகாதோ என் மனது
உனைக் கண்ட வேளையிலே

நினைவறியா நிழல்பாதை
நெடுந்தூரப் பயணம்தான்
நிஜமுணர விருப்பமிலா
நெஞ்சோடு பிணக்கம் தான்.
எனைத் தொடர இணையே யுன்
எழில் கால்கள் உண்டென்றால்
எட்டிடுவேன் எத்திசையும்
என்மனதில் தீரம்தான்.

தேன்



இலைத்தேனாய்
கண்ணசைவில்
திளைத்தேனா?
உன் நினைவில்
இளைத்தேனா?
கண்மணியே சொல்.

கலைத் தேனா,
காதல்
மழைத் தேனா?
கவி சொல்லிப்
பிழைத்தேனா,
பொற்கொடியே நில்.

வருந்தேனா
வாசம்
வரும் தேனா?
உன்னில்
பொருந்தேனா?
பெண்ணழகே நில்..

கருந்தேனாய்
உள்ளம்
உறுத்தேனா?
காதல்
மறுப்பேனா
பொன்மணியே சொல்.

மலைத்தேனாம்
உன்னழகில்
மலைத்தேனோ?
மன்றம்
அழைப்பேன் நான்,
என்னுயிரே வா!

வேலை



அதிகாலை எழுந்து
வீட்டின்
வேலைகளை முடித்து
அவசரமாய் கிளம்பி
அலுவலகம் சென்று
அலுவல்களை முடித்து
வீடு திரும்பும்போது
அப்பாடா
என்றிருக்கும்.
ஆனால்,
இரவு வரை வீட்டில்
எத்தனையோ வேலை.
அலுவலகம் சென்றால்
அங்கே பல பேய்கள்,
வீட்டிற்க்கு வந்தால்
இங்கே பல நோய்கள்.
வேலைப்பளு குறைக்க
வேலைக்காரி வைத்தால்
கணவன்
கயவனாவான்.
பேரனைப் பார்க்க
பெரியவர்கள் என்றால்
பெருஞ்சுமையென நினைத்து
வசைபாடி வருவார்.
பெண்ணொருத்தி அவள்
என்னதான் செய்வாள்?
வேலைக்குப் போய்
வருமானம் தரணும்.
வீட்டிலே வேலை
அவள்தான் செய்யணும்.
தன் பெற்றோருக்கு
தம்பிடிக் காசு...?
நாய்களுக்கும்
பேய்களுக்கும் நடுவில்
அவள் நைந்துதான் போவாள்.
(பி.கு) என் நண்பரின் வீட்டு நிலை இது.
எல்லோரையும் குறிப்பதல்ல)

இதழ் மொட்டு



எனைத் தொட்ட இதழ் மொட்டு
உனதன்றி வேறேது?