Tuesday, 2 July 2013

யாருக்கு இழப்பு?



பள்ளிக்கூட பாடம்
பகுத்தறிவைத் தரவில்லை.

ஒப்பிக்கும் திறனை
உயர்ந்திட வைத்தது.
அன்னையும் பிதாவும்
அனுதினம் படிக்க வைத்து
மெமரியை
மேம்படச் செய்தனர்.

உற்ற நண்பர்கள்
மூச்சு முட்டிப்
படிக்கக் கண்டு
நானும் பயந்து படித்தேன்,
முட்டி முட்டி....
பல நேரம்
படிப்பதாய்
நடித்தேன்.

எல்லோரும் சொன்ன மந்திரம்
“வேலைக்குப் படி”
படித்தேன்.
வேலைதான் இல்லை.

படித்ததை ஒப்பிப்பேன்,
போதுமா?
வாழ்க்கையை
படிக்க வேண்டாமா?

உணர்ந்து படித்திருந்தால்
நானும் ஒரு
ராமானுஜனாகி
இருக்க மாட்டேனா?
புதிய கண்டு பிடித்தல்கள்
புண்ணிய பாரதத்திற்கு
கிடைத்திருக்குமோ?

எல்லோரும்
என்னைப்போல் தான்.
இழப்பு எனக்கா?
இந்த நாட்டிற்கா?

என்று வருவாள்?



கனவெனும் வாழ்க்கையில்
கவிதை சொன்னவள்,
தினமொரு பூவென
மலர்ந்து நிற்பவள்.
விழிமலர் விதையினைத்
தூவிச் செல்பவள்.
கனிமொழி தேன்குரல்
கலந்தினிப்பவள்.
என்மன வானிலே
இசைந்து பாடிட
என்னுயிர் தீபமாய்
என்று வருவாளோ?

பெருமை கொள்ளும்



இடைவெளி யின்றி சுவாசம் எடு,
ஒவ்வோர் இழையிலும் இன்னுயிர் தேடு,
கரையெது மில்லா கடலுன் வீடு,
கவலைக ளின்றி நுழைந்து யிர்த் தேடு!

கார்முகில் கண்ணுள் கனவினைக் கொண்டு
காதலை வென்று கவலைகள் வேரறு,
வேர்வைகள் கொண்டு வியந்திடல் இன்றி
வாலிபக் கால வாழ்வினுள் சென்றிடு!

தோல்விகள் இல்லா சோகங்கள் சூழா
தோள்களும் இல்லை தோழனே வந்திடு,
பாரினுள் உந்தன் பேரதைச் சொல்ல
பெருமைகள் கொண்டு காத்திடும் நாடிது!

வாழ்க்கை ஓடம்



ஓடத்தி லொரு நாள்,
வெள்ளத்தி லொரு நாள்,
வாழ்க்கையின் பயணம்
வாழ்ந்திடத் தெளியுமோ?

தூதுவன்



மொட்டை மாடிப்
படிக்கட்டில்
தன்னந்தனியா யவள்,

வீட்டுத் திண்ணையில்
விட்டத்தைப் பார்த்தபடி நான்,

தூது சொல்ல வந்தவன்
வெள்ளைக் கரங்களால்
தொட்டு எழுப்பினான்,

அவள் முகத்தின்
பிரதிபலிப்பை
அவனில் கண்டேன்.

எனை யிழந்த
ஏக்கத்தில்
நீர் நிறைந்த கண்களில்
கண்மசி கரைந்து
திட்டு திட்டாய்,

பசலை நோய்
பிடித்ததால்
முகமும் வெளுத்ததோ?

கார்மேகக் குழல் நடுவே
கவலை மேகங்கள்
தடவிச் செல்லுதோ?

அவள் நிலைமை
எனக்குச் சொன்னாய்,
என் நிலைமை
அப்படியே
எடுத்துச் சொல்வாயோ,
வெண்ணிலவே?